உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு கல்லுாரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்  

அரசு கல்லுாரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்  

திருப்பூர், ;இளங்கலை பட்டப்படிப்புக்கு அரசு கல்லுாரிகளில் மொத்தமுள்ள இடங்களை விட, பத்து மடங்கு விண்ணப்பம் குவிகிறது. கவுன்சிலிங் நடத்தி முடிப்பதில் தடுமாறும் அரசு கல்லுாரி நிர்வாகங்கள், விதிமுறைகளை சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என கல்லுாரி முதல்வர்கள் வலியுறுத்துகின்றனர்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் இளங்கலை பட்டப்படிப்புகளில் இணைய விரும்புவோர், மே 7 முதல் விண்ணப்பிக்க, கல்லுாரி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியது. மே 27 உடன் அவகாசம் முடிவடைந்தது. ஜூன் 2 முதல் சிறப்பு பிரிவுக்கும்; 4 முதல் பொதுப்பிரிவுக்கும் கவுன்சிலிங் நடந்து வருகிறது. கலை, அறிவியல் என ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால், விண்ணப்பித்தவர்களை கவுன்சிலிங் அழைக்கும் போது அவர்களில் பலர் வேறு கல்லுாரியில் ஏற்கனவே இணைந்துள்ள தகவல் தெரிய வருகிறது.பத்து மடங்கு விண்ணப்பம்கல்லுாரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், ''மாநிலத்தில் அதிக மாணவியர் படிக்கும் இரண்டாவது பெரிய கல்லுாரியாக எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியில் மொத்தமுள்ள, 1,066 இடங்களுக்கு, 5,612 பேர் விண்ணப்பித்துள்ளனர். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில், மொத்தமுள்ள, 1,088 இடங்களுக்கு, 10, 261 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஐந்து முதல் பத்து மடங்கு விண்ணப்பம் அதிகமாக வந்துள்ளது'' என்றனர்.---எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில் இளநிலைப் பட்ட வகுப்புகளில் சேர்வதற்கான சிறப்புப்பிரிவு கவுன்சிலிங் நடந்தது.(பைல் படம்)

'விதிமுறைகளில் மாற்றம் தேவை'

அரசு கல்லுாரி முதல்வர்கள் கூறியதாவது:எவ்வளவு கல்லுாரிக்கு, எத்தனை பாடங்களுக்கு வேண்டுமானால் விண்ணப்பிக்கலாம் என்பதாலும்; அரசு கல்லுாரிகளில் விண்ணப்ப கட்டணம் குறைவு என்பதாலும், ஒரு மாணவர் அல்லது மாணவி, ஐந்து முதல், 25 கல்லுாரிகளுக்கு, சில நேரங்களில் ஒரே கல்லுாரியில் பெரும்பாலான பாடப்பிரிவுக்கும் விண்ணப்பித்து விடுகின்றனர்.கவுன்சிலிங் அழைப்பு விடுக்கும் போது, ஒருவருக்கு பலமுறை போன் செய்ய வேண்டியுள்ளது. பெரும்பாலானோர் வேறு கல்லுாரிகளை தேர்வு செய்தவர்களாக உள்ளனர். கல்லுாரி நிர்வாகங்களுக்கு மிகுந்த நேர விரயம் ஏற்படுகிறது. ஒரு மாணவர், ஒரு மாணவி குறிப்பிட்ட அல்லது குறைந்தபட்ச எண்ணிக்கையிலான கல்லுாரிக்கு மட்டும் விண்ணப்பிக்க முடியும்.மாவட்டம் அல்லது மண்டலத்துக்குள் விண்ணப்பிக்கலாம் என விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஒரு கல்லுாரியில் ஒருவர் இணைந்து விட்டால், அடுத்த கல்லுாரிக்கு விண்ணப்பிக்க முடியாதவாறு விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் கல்லுாரி கவுன்சிலிங்கில் மாணவர் காத்திருப்பது குறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி