நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு விழா
அவிநாசி: ஜி.எஸ்.டி. குறைப்பு செய்த மத்திய அரசையும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் பாராட்டி கவுரவிக்கும் வகையில் வரும் 11ம் தேதி கோவையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம், அவிநாசியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநில தலைவர் விக்கிரமராஜா பேசியதாவது: ஆன்லைன் வர்த்தகம் வாயிலாக, கடந்த தீபாவளி பண்டிகை சமயத்தில், 35 சதவீத வியாபாரத்தை, வியாபாரிகள் மற்றும் வணிகர்களிடமிருந்து 'ஆன்லைன்' வணிகம் நடத்துபவர்கள் பறித்துள்ளனர். இதனால் சாமானியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய, மாநில அரசுகளிடம் சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என கோரிக்கை அளித்து வருகிறோம். ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் நான்கு கட்டங்களாக அமல்படுத்திய போது, 2017ல், கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தோம். அதனைத் தொடர்ந்து, 11 முறை டெல்லிக்கு நேரடியாக சென்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து ஜி.எஸ்.டி. வரி விதிப்பை குறைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம். தற்போது வரியை குறைத்துள்ளனர். எனவே, வரும், 11ம் தேதி ஜி.எஸ்.டி. வரி குறைப்பு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், வரிவிதிப்பை விரைவில் அமல்படுத்தி, பொருட்களின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அளிக்கிறோம். விழாவுக்கு அனைத்து வியாபாரிகள், வணிகர்கள் கண்டிப்பாக வருகை தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். திருப்பூர் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட செயலாளர் லாலா கணேசன், பொருளாளர் முத்துகுமரன், மாநகரத் தலைவர் ஜான் வல்தாரிஸ், இளைஞரணி அமைப்பாளர் வினோத்குமார், அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமரன், செயலாளர் அபுசாலி, பொருளாளர் தனசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.