உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; அத்துமீறினால் கைது நடவடிக்கை

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; அத்துமீறினால் கைது நடவடிக்கை

திருப்பூர்: ''ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில், பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்துகொள்வோர் மீது கைது நடவடிக்கை பாயும்'' என்று மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்தார். ஆங்கிலப் புத்தாண்டு, 2026-ஐ வரவேற்க பொதுமக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். 'புத்தாண்டை விபத்தில்லா ஆண்டாக வரவேற்று கொண்டாட வேண்டும்' என்ற, எண்ணத்தில் மாநகர போலீசார் தயாராகி வருகின்றனர். இதுதொடர்பாக துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோருடன் கமிஷனர் ராஜேந்திரன் ஆலோசனை மேற்கொண்டார். பல்வேறு அறிவுரைகளை புத்தாண்டுக்கு முந்தைய தினம் மாலை முதல் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். தற்காலிக சோதனைச்சாவடிகள் அன்றைய தினம் வழிபாட்டு தலங்களில் கண்காணிப்பு, வழக்கமாக உள்ள போலீஸ் சோதனைச்சாவடிகளுடன் முக்கிய சந்திப்புகளில் கூடுதலாக தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: புத்தாண்டை மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட வேண்டும். 31ம் தேதி மாலை முதல் முக்கிய சந்திப்புகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட உள்ளனர். இது தவிர்த்து, சோதனைச்சாவடிகளிலும் நடைபெறும். வழிபாட்டு தலங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கூடுதல் ரோந்து மேற்கொள்ள உள்ளோம். போதையில் வாகனம் ஓட்டாதீர்கள் மதுபோதையில் வாகன ஓட்டுபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும். அதிவேகமாகவும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும், மக்களுக்கு இடையூறு செய்யும் விதத்திலும் வாகனங்களை இயக்கினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், உரிய சட்டப்பிரிவுகளில் வழக்குபதிந்து கைது செய்யப்படுவர். பொதுமக்களுக்கு இடையூறு கூடாது பொது இடங்களில், ரோட்டில் வைத்து கேக் வெட்டுவது, பாடல்களை போட்டு மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் எதுவும் செய்யக்கூடாது. இதை போலீசார் அனுமதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த விதிமீறல்களுக்கு தகுந்தாற்போல் நடவடிக்கை இருக்கும். அறிவுரை வழங்கி, எச்சரிக்கை செய்வது கிடையாது; நடவடிக்கை தான் பாயும். வற்புறுத்தியோ, கேலி செய்யும்படி நடந்து கொள்ளக் கூடாது. மக்களுக்கு இடையூறு இல்லாமல், பாதுகாப்பாக புத்தாண்டை கொண்டாட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை