வாவிபாளையம் கிராமத்தில் குப்பை கொட்ட முயற்சி?
பல்லடம்: ''நகரப் பகுதியின் குப்பைகளை கொட்டி விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் நிறைந்த கிராமங்களின் இயற்கை வளத்தை கெடுக்கும் முயற்சி நடந்து வருகிறது'' என்று கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயல் தலைவர் வெற்றி குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது: இடுவாய், முதலிபாளையம் பகுதிகளில் மாநகராட்சி குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கடுமையான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பல்லடம் அடுத்த, வாவிபாளையம் ஊராட்சி, குள்ளம்பாளையம் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில், அரசு அதிகாரிகள் குழு ஆய்வு செய்துள்ளனர். எதற்காக ஆய்வு நடந்தது என, அதிகாரிகள் முறையாக தெரிவிக்காத நிலையில், திருப்பூர் மாநகர குப்பைகளை கொட்டுவதற்காகவே இந்த ஆய்வு நடந்ததாக கூறப்படுகிறது. சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். வாவிபாளையம் ஊராட்சி முழுமையான பி.ஏ.பி. பாசனம் மற்றும் தென்னை விவசாயம் நிறைந்த பகுதியாகும். திருப்பூர் மாநகராட்சியின் குப்பைகளை, குள்ளம்பாளையம் கிராமத்தில் கொட்டினால், விவசாயத்தை ஒழித்து, சுற்றுச்சூழலை சீரழித்து, மக்கள் வாழ தகுதியற்ற பகுதியாக இது மாறிவிடும். திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், இவ்வாறு ஏதேனும் திட்டம் வைத்திருந்தால், இப்போதே அதை கைவிட வேண்டும். மீறி இதற்கு முயற்சித்தால், கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் மிகப்பெரும் போராட்டத்தை நடத்துவோம்.