உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  என்.எச்.ரோட்டில் மறியல் : ஆட்டோ டிரைவர்கள் கைது

 என்.எச்.ரோட்டில் மறியல் : ஆட்டோ டிரைவர்கள் கைது

பல்லடம்: பல்லடம் பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளில், 40 டிரைவர்கள் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்கின்றனர். நேற்று முன்தினம், புதிதாக சில ஆட்டோ டிரைவர்களும் பஸ் ஸ்டாண்டில் இணைந்தனர். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த பழைய ஆட்டோ டிரைவர்கள், போலீசில் புகார் அளித்தனர். அதில், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, நேற்று காலை, குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், 'பல ஆண்டுகளாக இதே இடத்தில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறோம். சிறிய நகரம் என்பதால் குறைந்த அளவு வருமானம்தான் கிடைக்கிறது. இதனை கொண்டு தான், 40 குடும்பத்தினர் வாழ்க்கை நடத்தி வருகிறோம். எங்களுக்கே போதிய வருமானம் இல்லாத நிலையில், புதிதாக ஆட்டோக்களை அனுமதித்தால் வாழ்வாதாரம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படும். எனவே, புதிய ஆட்டோக்களை இங்கு அனுமதிக்க கூடாது,' என்றனர். முன்னதாக, சாலை மறியலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்களுடன் இன்ஸ்பெக்டர் மாதையன் பேச்சுவார்த்தை நடத்தினார். 'பஸ் ஸ்டாண்ட் என்பது பொதுவான இடம். இங்கு ஆட்டோக்களை நிறுத்தலாம்; நிறுத்தக்கூடாது என்று கூறுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. இது நகராட்சிக்கு சொந்தமான இடம் என்பதால், அவர்கள் தான் தீர்வு காண வேண்டும். சாலை மறியல் போராட்டத்தால், அரசு கவனத்துக்கு சென்றிருக்கும். மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கையை கூறுங்கள்,' என்று கூறிய இன்ஸ்பெக்டர், மறியலில் ஈடுபட்ட, 24 பெண்கள் உட்பட 64 பேரை கைது செய்தார். மறியல் போராட்டத்தால், என்.எச்.ரோட்டில், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ