திருப்பூர்:'உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள், இருட்டடிப்பு செய்யப்படுகிறது' என, பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.தமிழகத்தில், பா.ஜ,. தனது செல்வாக்கை வளர்த்து வருகிறது. 'மத்திய அரசின் திட்டங்கள், அதன் மூலம் மக்கள் பெற்ற பயன்களை, பட்டி தொட்டியெங்கும் உள்ள மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்,' என, கட்சி நிர்வாகிகளுக்கு, கட்சித்தலைமை உத்தரவிட்டுள்ளது.அதன்படி, சாலையோர வியாபாரிகளுக்கு, மத்திய அரசு பல்வேறு நல உதவிகளை அறிவித்துள்ளது. தகுதியான சாலையோர வியாபாரிகளுக்கு, அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 10,000 ரூபாய் கடன் பெற்ற சாலையோர வியாபாரிகளுக்கு, மத்திய அரசின் விபத்து காப்பீடு திட்டம், ஆயுள் காப்பீடு திட்டம், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம், அரசு மருத்துவமனையின் பிரசவிக்கும் பெண் குழந்தைகளுக்கான திட்டம் என, பல நலத்திட்டங்களை பா.ஜ., அரசு அறிவித்துள்ளது.மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில், இதுதொடர்பாக முகாம் நடத்தி பயனாளிகளை தேர்வு செய்ய எனவும், மத்திய அரசு வழிகாட்டியுள்ளது. இம்முகாம் தொடர்பாக, உள்ளாட்சி அலுவலகங்களின் முகப்பில், 'பிளக்ஸ் பேனர்' வைக்கப்பட்டுள்ளது. இந்த 'பேனர்' கடமைக்கு மட்டுமே வைக்கப்பட்டிருக்கிறது' என, பா.ஜ.,வினர் கூறி வருகின்றனர். தங்களின் எதிர்ப்பையும் உள்ளாட்சி நிர்வாகத்தினரிடம் தெரிவித்து வருகின்றனர்.பா.ஜ., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக, மாநில மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால், இத்திட்டங்கள் அனைத்தும், மாநில அரசு வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் திட்டம் தொடர்பான 'பேனரில்' பிரதமர் மோடியின் புகைப்படம் அச்சிடுவதில்லை; 'மத்திய அரசு' என்ற வார்த்தைக்கு பதில், 'ஒன்றிய அரசு' என்றே குறிப்பிடப்படுகிறது. அதுவும், சிறிய வார்த்தைகளால், சிறியளவில் பேனர் அச்சடிக்கப்படுகிறது. இது, மத்திய அரசின் திட்டங்களை இருட்டடிப்பு செய்வது போன்றுள்ளது. எனவே, விரிவான வகையில் இத்திட்டம் குறித்து விளம்பரம் செய்து, அதிகளவு பயனாளிகளை சேர்க்க, உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.