உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஏற்றம் தரும் மாற்றம்! சீசனில் மக்காச்சோள சாகுபடி அதிகரிப்பு; சில ஆண்டுகளுக்கு பின் அதிகரித்த ஆர்வம்

ஏற்றம் தரும் மாற்றம்! சீசனில் மக்காச்சோள சாகுபடி அதிகரிப்பு; சில ஆண்டுகளுக்கு பின் அதிகரித்த ஆர்வம்

உடுமலை : உடுமலை பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளை காட்டிலும், நடப்பாண்டு மக்காச்சோளம் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதி களில், மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக இருந்தது.இப்பகுதிகளில், முன், 40 ஆயிரம் ஏக்கர்வரை சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், வறட்சி, படைப்புழு தாக்குதல், விலையில்லாதது உள்ளிட்ட காரணங்களினால், கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோளம் சாகுபடி பரப்பளவு குறைந்து வந்தது. இந்நிலையில், நடப்பாண்டு பெய்த தென் மேற்கு பருவ மழை காரணமாக, கிணறு, போர்வெல்களில் ஓரளவு நீர்மட்டம் அதிகரித்தது.மேலும், பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து நான்கு சுற்றுகள் தண்ணீர் திறக்க அரசாணை வெளியிடப்பட்டது.மேலும், அமராவதி அணையும் நிரம்பி, குறிப்பிட்ட தருணத்தில், பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது விவசாயிகளை மக்காச்சோளம் சாகுபடி செய்ய ஆர்வத்தை ஏற்படுத்தியது.நடப்பாண்டு, கோழித்தீவனம், மாட்டுத்தீவனம் பயன்பாடு மட்டுமின்றி, எத்தனால் உற்பத்திக்கும் மக்காச்சோளம் பயன்படுவதால், தேவை அதிகரித்துள்ளது.இதனால், மக்காச்சோளம் சாகுபடியில் வருவாய் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், அதிகளவு விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.எனவே, கடந்த சில ஆண்டுகளை காட்டிலும், 10 ஆயிரம் ஏக்கர் வரை கூடுதல் பரப்பளவில் மக்காச்சோளம் விதை நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, பி.ஏ.பி., தண்ணீர் திறப்பு மற்றும் இறவை பாசனத்தை ஆதாரமாகக்கொண்டு, ஏறத்தாழ, 40 ஆயிரம் ஏக்கர் வரை, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.வட கிழக்கு பருவ மழை காலத்தில், இறவை மற்றும் மானாவாரியாகவும், கூடுதல் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படும் வாய்ப்புள்ளது.தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம் அறுவடை டிச., மாதம் துவங்கி, மார்ச் வரை நீடிக்கும். உடுமலை பகுதிகளில், பல ஆண்டுகளுக்கு பின், மீண்டும் மக்காச்சோளம் சாகுபடி அதிகரித்துள்ளது, என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைகொடுக்குமா அரசு

மக்காச்சோள சாகுபடியில், படைப்புழு தாக்குதல் மிகப்பெரிய சவாலாக விவசாயிகளுக்கு மாறியுள்ளது.பயிரின் வளர்ச்சி தருணத்திலேயே அதிக சேதம் ஏற்படுத்தும் இப்புழு தாக்குதலால், கூடுதலாக மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்; சாகுபடி செலவும் பல மடங்கு அதிகரித்து விட்டது.சில ஆண்டுகளுக்கு முன் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த தேவையான மருந்துகள், வேளாண்துறை வாயிலாக மானியத்தில் வினியோகிக்கப்பட்டது. இத்திட்டம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமைந்தது.எனவே, நடப்பு சீசனிலும், படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த தேவையான உதவிகளை வேளாண்துறை வாயிலாக அரசு வழங்கினால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்; மக்காச்சோள சாகுபடி பரப்பும் குறையாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ