உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  நல்லாற்றில் கெட்ட நீர் ஓடலாமா?

 நல்லாற்றில் கெட்ட நீர் ஓடலாமா?

'பெ யரே நல்லாறு... அதில் கெட்ட நீர் ஓடலாமா?' வினாவிலேயே விடையும் இருப்பதை கூட உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் தான் மக்களுக்கும், அவர்களை ஆளும் ஆட்சியாளர்களுக்கும் இருந்து கொண்டிருக்கின்றனர். அவிநாசி, காமராஜர் நகரில் துவங்கி முத்துசெட்டிபாளையம், காமராஜர் வீதி, சீனிவாசபுரம், போஸ்ட் ஆபீஸ் வீதி, கைகாட்டிபுதுார் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து வீடுகளில் இருந்து வெளியேறும், சாக்கடை, கழிவுநீர் நல்லாறில் தான் நேரடியாக கலக்கிறது. கடந்த, 2011ல், அப்போதைய அவிநாசி பேரூராட்சி நிர்வாகம், நல்லாற்றை ஒட்டியுள்ள புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறமும், சீனிவாசபுரம் பகுதியிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, பேரூராட்சியில் உள்ள ஒட்டுமொத்த வீடு, ஓட்டல் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து, சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டும் நல்லாற்றில் விட திட்டமிட்டு, அதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. அதன்பின், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; திட்டம் கிடப்பில் போடப்பட்டது. முயற்சி எடுப்போம் அவிநாசி நகராட்சி தலைவர் தனலட்சுமி: நல்லாற்று நீரை சுத்தமாக்கும் நோக்கில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து கடந்தாண்டு, குடிநீர் வடிகால் வாரியத்தினரிடம் கோரிக்கையை முன்வைத்தோம். நல்லாற்றில் கழிவுநீர் கலக்கும் பகுதிகளில், ஆங்காங்கே கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிகள் அமைத்து, அவற்றில் இருந்து பெரிய குழாய் வழியாக கழிவுநீரை வெளியேற்றி, சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அத்தகைய பணி மேற்கொள்ளும் போது, வீடுகளை ஒட்டிய சாலைகளை பெயர்த்து தான், குழாய் பதிக்க வேண்டியிருக்கும் என்பது போன்ற நடைமுறைகளை விளக்கினர். இது, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், திட்டம் நிலுவையில் வைக்கப்பட்டிருக்கிறது. தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், வரும் ஆண்டுகளில் திட்டத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் நல்லாற்றில் குளித்துமீண்டும் வருமோ அந்நாள்! பாலகிருஷ்ணன், அவிநாசி குளம் காக்கும் அமைப்பு: 'நல்லாற்றில் இறங்கி குளித்து, துணிகளை அங்கேயே துவைத்து, அருகில் உள்ள கோவிலில் வழிபட்டு, நெற்றி நிறைய திருநீறு வைத்து, பிரசாதம் வாங்கிக் கொண்டு வீடு திரும்புவோம்' என, 70 ஆண்டுகளுக்கு முன், என் உறவினர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். அந்தளவு தெளிந்த நன்னீர் பாய்ந்தோடிய நல்லாறு, இன்று கழிவு கலந்து மாசடைந்திருக்கிறது. தன்னார்வலர் இணைந்து, 'குளம் காக்கும் இயக்கம்' என்ற அமைப்பை நிறுவி, பிரதி ஞாயிறன்று, காலை, நல்லாற்று நீர் நிரம்பும் தாமரைக்குளம், அதன் வடிநிலத்தில் உள்ள சங்கமாங்குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகிறோம். இதுவரை, 65 வாரம் நிறைவு பெற்றிருக்கிறது. 'வனம்' பவுண்டேஷன் ஏற்பாட் டில் 'பொக்லைன்' உதவியுடன், குளத்தில் படர்ந்திருந்த சீமைக்கருவேலன் மரங்கள், புதர் செடிகள் அகற்றப்பட்டன. அவர்கள் வழங்கிய, 3,000 பனை நாற்றுகளும், கரையோரம் நடப்பட்டன. இத்தகைய பணிகளால், இரு குளங்களும் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. கழிவு நிறைந்து, கால் வைக்க முடியாத அவலநிலையில் இருந்த தாமரைக்குளத்தில், இன்று, பக்தர்கள் இறங்கி, நீரில் கால் நனைத்து செல்கின்றனர். இதமான சூழல் நிலவுவதால் பலவித பறவைகள் வந்து, பல்லுயிர் பெருக்கத்துக்கு உதவி செய்ய துவங்கியிருக்கிறது. அதே போன்று, நல்லாற்றையும் மீட்டெடுக்க பொதுமக்களை உள்ளடக்கிய அமைப்புகள் உருவாக வேண்டும்; அரசுஒத்துழைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை