மேலும் செய்திகள்
முதல்வர் கோப்பை போட்டி முன்பதிவு துவக்கிவைப்பு
19-Jul-2025
திருப்பூர்; முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க விரும்புவோர், வரும் ஆக. 16ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்யவேண்டும். நடப்பு ஆண்டுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவில் வரும் ஆக. 22ல் துவங்கி செப். 12ம் தேதி வரை நடைபெற உள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் ஆகிய ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. மாவட்ட அளவில், 25 வகையான போட்டிகளும்; மண்டல அளவில் ஏழு போட்டிகள்; மாநில அளவில் 37 வகையான போட்டிகள் நடத்தப்படும். முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள், https://cmtrophy.sdat.in, https://sdat.tn.gov.inஎன்கிற இணையதளத்தில், வரும் ஆக. 16ம் தேதி மாலை, 6:00 மணிக்குள் பதிவு செய்யவேண்டும். தனிநபர் போட்டிகளில் மாநில அளவில் வெற்றிபெறுவோருக்கு, முதல் பரிசு ஒரு லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசு, 75 ஆயிரம், மூன்றாம் பரிசு, 50 ஆயிரம் வழங்கப்படும். குழு போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு, முதல் பரிசு தலா 75 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசு தலா 50 ஆயிரம்; மூன்றாம் பரிசு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆறு முதல் பிளஸ் 2 படிக்கும் 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள்; 25 வயதுக்கு உட்பட்ட கல்லுாரி மாணவர்கள்; 15 முதல் 35 வயது வரையிலான பொதுபிரிவினரும், அனைத்து வயது அரசு பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கலாம். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சுயமாகவே முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 0421 2244899 என்கிற எண்ணில், திருப்பூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
19-Jul-2025