| ADDED : நவ 15, 2025 01:08 AM
பல்லடம்: பல்லடம் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, வாழை இலை போட்டு மாணவர்களுக்கு வடை பாயசத்துடன் விருந்து வழங்கப்பட்டது. குழந்தைகள் தினமான நேற்று, பல்லடம் அருகே, பனிக்கம்பட்டி ஊராட்சி, சின்னியகவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருக்கு, வடை பாயசத்துடன் விருந்து வழங்கப்பட்டது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மரிய மேகலா கூறியதாவது: எங்கள் பள்ளியில், 300 மாணவ மாணவியர் படிக்கின்றனர். குழந்தைகளுக்கு ஒரு நாள் விருந்து வழங்க வேண்டும் என, எஸ்.எம்.சி. நிர்வாகிகள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி, குழந்தைகள் தினமான இன்று (நேற்று) விருந்து வழங்க தீர்மானித்தோம். எஸ்.எம்.சி. நிர்வாகிகள் அனைவரும் இணைந்து, பள்ளி குழந்தைகள் அனைவருக்கும், வாழை இலை போட்டு, வடை பாயாசத்துடன் மதிய உணவு ஏற்பாடு செய்தனர். மேலும், அவர்களே அனைத்து மாணவர்களுக்கும் உணவு பரிமாறி உபசரித்தனர். குழந்தைகள் தினத்தன்று நடந்த இந்நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். மாணவர்களுக்கு விருந்து அளித்தது குறித்து, எஸ்.எம்.சி. தலைவர் ஜோசப் சுதாகர் கூறுகையில், ''பள்ளி தலைமை ஆசிரியர் ஒத்துழைப்புடன், குழந்தைகள் தினத்தன்று, பள்ளியில் உள்ள அனைத்து மாணவ, மாணவியருக்கும் விருந்து அளித்தோம். அது, மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தோம்,'' என்றார்.