பூமிக்கு கவலை அளிக்கும் கால நிலை மாற்றம்! பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு அத்தியாவசியம்: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அட்வைஸ்
திருப்பூர்: ''ஜவுளித்துறையில், கார்பன் உமிழ்வை குறைப்பது மிகவும் அத்தியாவசியமானது,'' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் இளங்கோவன் பேசினார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், 'பேர் டிரேடு இந்தியா' சார்பில், 'கார்பன்' உமிழ்வு கட்டுப்பாடு குறித்த கருத்தரங்கு நடந்தது. சங்கத்தின், 'பிராண்டிங்' மற்றும் வணிக மேம்பாட்டு துணை குழு தலைவர் ஆனந்த் வரவேற்றார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், நிலைத்தன்மை தொழில்நுட்ப தரநிலைகள் குறித்து சான்றிதழ் பெறுவதில் அதிக ஆர்வம் காட்டி வருவதால், நிலையான உற்பத்தி தொழில்நுட்பம் மேம்படுமென தெரிவித்தார். கருத்தரங்கில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் இளங்கோவன் கூறுகையில், ''ஆடை மற்றும் ஜவுளி துறையில், 'கார்பன்' உமிழ்வு கட்டுப்பாடு முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகளாவிய, பசுமை குடில் வாயு வெளியேற்றத்தில், ஏற்றுமதி தொழில், 10 சதவீதம் பங்கு வகிக்கிறது. ஜவுளி கழிவுகளை எரிப்பதால், கார்பன் வெளியேற்றமும் அதிகரிக்கிறது. ஜவுளித்துறையில், கார்பன் உமிழ்வை குறைப்பது மிகவும் அத்தியாவசியமானது,'' என்றார். சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி பேசுகையில், ''உலக அளவிலான சுற்றுச்சூழல் சீரழிவு அபாய கரமானதாக இருக்கிறது. ஆடை உற்பத்தித்துறையில், இயற்கைக்கு பாதிப்பு இல்லாத, நீடித்த நிலையான உற்பத்தி மேம்பட வேண்டும். இந்தியாவின், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில், தமிழகம் மட்டும், 60 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளது. திருப்பூர் பயன்படுத்தும் மின்சாரத்தில், 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அரசு, 2070ல், பூஜ்ஜிய நிலை கார்பன் உமிழ்வை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. வளம் குன்றா வளர்ச்சி உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்,'' என்றார். கருத்தரங்கில், 'பேர் டிரேடு' இந்தியா' நிறுவன பிரதி நிதிகள், கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து விளக்கி,ஏற்றுமதியாளர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர். 'பிராண்டிங்' துணை குழு துணை தலைவர் மேழிச்செல்வன் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பலர் பங்கேற்றனர்.