அலகுமலையில் ரூ.200 வசூல்! அறநிலையத்துறை கண்டு கொள்ளாதது ஏன்? பக்தர்கள் கேள்வி
திருப்பூர்; அலகுமலை ஸ்ரீமுத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் இருக்கிறது. இருப்பினும், கோவில் விழாக்களை, பக்தர்கள் அடங்கிய கமிட்டி ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.ஒவ்வொரு ஆண்டும், கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, அலகுமலை கோவில் தொடர்பான புகழ் பரவியதால், கந்தசஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள், இக்கோவிலில் வந்து காப்புக்கட்டுகின்றனர். அதன்படி, கடந்த, 2ம் தேதி, ஏராளமான பக்தர்கள் வந்து காப்புக்கட்டினர். இருப்பினும், கந்தர்சஷ்டி விழாக்குழு சார்பில், 200 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்ததால், பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறுகையில், 'அலகுமலை கோவிலில், ஏராளமான பக்தர்கள் வந்தாலும், உரிய அடிப்படை வசதி செய்யவில்லை. சஷ்டி விரதம் இருக்க காப்புக்கட்ட, 200 ரூபாய் கட்டாயமாக வசூலிக்கப்பட்டது; பணம் கையில் இல்லாதவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஹிந்து சமய அறநிலையத்துறை, முறைப்படுத்த வேண்டும்.சூரசம்ஹாரத்தன்று, அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால், தேவையான வசதிகளையும், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். கட்டணம் வசூலிக்கப்படுவதாக இருந்தால், முன் கூட்டியே அறிவிப்பு செய்ய வேண்டும்,' என்றனர்.இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) சீனிவாசனிடம் கேட்டபோது, ''அலகுமலை கோவிலில், காப்புக்கட்ட 200 ரூபாய் கட்டணம் வசூலித்தது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். சூரசம்ஹார விழாவுக்கு, போலீஸ் பாதுகாப்பு உட்பட, அனைத்து வசதிகள் செய்யப்படும்,'' என்றார்.