| ADDED : ஜூலை 29, 2024 11:17 PM
திருப்பூர்:'திருமுருகன்பூண்டி பகுதியில் நல்லாறு கரையோரம் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடம் கட்டடப்பட்டு வருகிறது,' என, பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.திருமுருகன்பூண்டி பா.ஜ., கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், கட்சியினர் சிலர், நேற்று திருமுருகன்பூண்டி நகராட்சி அதிகாரிகளிடம் மனு வழங்கினர். அதில், 'திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் நல்லாற்றின் ஒரு கரையில் உள்ள இடுகாட்டையும், மறுகரையில் உள்ள நீர் வழிப்பாதையையும் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. நீர்வழிப்பாதைகளை ஆக்கிரமித்து எவ்வித கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படக்கூடாது என, கோர்ட் உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை பொருட்படுத்தாமல் பூண்டி நகராட்சி நிர்வாகம் கட்டுமானப் பணி மேற்கொண்டு வருவது, கண்டிக்கத்தக்கது. பொதுப்பணித்துறையினரின் முறையான அனுமதி பெற்று கட்டடம் கட்டும் பணியை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர். மேலும், அகில்நகர் பகுதியில் பூங்கா அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.