அடுக்குமாடி வீடுக்கான பங்களிப்பு தொகை உயர்வு! பயனாளிகள் தேர்வில் சிக்கல்
உடுமலை; கட்டுமானப் பொருட்களின் 'கிடுகிடு' விலையேற்றத்தால், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்படும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பங்களிப்பு தொகை, மும்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பயனாளிகள் தேர்வில் திணறும் நிலை ஏற்பட்டிருக்கிறது.தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், பொருளாதாரத்தில் நலிவுற்ற, ஆதரவற்ற மற்றும் வீடில்லாத ஏழை, எளிய மக்களுக்காக குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன.மூன்று கட்டடமாக கட்டப்படும் குடியிருப்பில், ஒவ்வொரு வீடும், 400 சதுர அடி பரப்பளவில் வரவேற்பறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்படுகிறது.வீடுகள் அமைந்துள்ள இடங்களுக்கு ஏற்ப, பயனாளிகளிடம் பங்களிப்பு தொகையாக, 80 ஆயிரம் ரூபாயில் துவங்கி, 1.50 லட்சம் ரூபாய் வரை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வசூலித்தது. பயனாளிகளும் இந்த தொகையை செலுத்தி, குடியிருப்பை சொந்தமாக்கி வந்தனர்.தற்போது, கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பங்களிப்பு தொகை கணிசமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு குடியிருப்புக்கு, 2.70 முதல், 3 லட்சம் ரூபாய், அதற்கும் அதிகமாக பங்களிப்பு தொகை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.இதனால், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்வதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.உடுமலையில், புக்குளம் மற்றும் கண்ணாடிபுத்துாரில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு, பயனாளிகள் தேர்வின் போது, பங்களிப்பு தொகை செலுத்த முடியாமல், பலர் பாதித்தனர். இதனால், வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், மீண்டும் பங்களிப்பு தொகை உயர்வால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'கட்டுமானப் பொருட்களின் விலை, தற்போது, மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளது. இதனால், திட்ட மதிப்பீடும் அதிகரித்து, அதற்கேற்ப, பயனாளிகளுக்கான பங்களிப்பு தொகையும் உயர்த்தப்பட்டிருக்கிறது.ஒரு வீட்டிற்கு, 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை பங்களிப்பு தொகை செலுத்த வேண்டியிருப்பதால், ஏழை, எளிய மக்களால் இது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இதனால், பயனாளிகள் தேர்வில் சிரமப்பட வேண்டியிருக்கும்,' என்றனர்.