சோளத்தட்டு அறுவடை பணி தீவிரம்
பல்லடம் : பல்லடம் வட்டாரத்தில், சோளத் தட்டுகள் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.பல்லடம் வட்டாரத்தில், தென்னை, வாழை, மக்காச்சோளம், சோளம் மற்றும் தக்காளி, வெங்காயம், வெண்டை, புடலை உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அதிக அளவில் பயிர் செய்கின்றனர்.விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வரும் விவசாயிகள், சோளத்தட்டு, வைக்கோல் உள்ளிட்டவற்றை கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கி, தீவன தட்டுப்பாட்டை ஈடு செய்கின்றனர். ஆண்டுதோறும், கோடை காலம் துவங்குவதற்கு முன், சோள தட்டுகள் அறுவடை செய்து அவற்றை தீவனங்களுக்காக சேமித்து வைப்பது வழக்கம்.அவ்வாறு, பல்லடம் வட்டாரத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள், சோளத்தட்டுகள் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படாத வகையில், ஆண்டுதோறும் தீவனப் பயிர்கள் சாகுபடி மேற்கொள்கிறோம். எதிர்வரும் கோடை காலத்தை சமாளிக்க, சோள தட்டுகளை சாகுபடி செய்து சேகரித்து வைத்து வருகிறோம்.இதிலிருந்து, சோளங்களை சேகரித்து, அவற்றை மீண்டும் விதையாக பயன்படுத்த சேகரித்து வைப்போம். தீவனப் பயிர்கள் சாகுபடிக்கு, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் வேளாண் துறை சார்பில் மானிய திட்டங்கள் வழங்கினால், விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.