| ADDED : நவ 26, 2025 06:56 AM
அவிநாசி: திருமுருகன்பூண்டி நகராட்சியில் நேற்று கவுன்சிலர்களின் மாதாந்திரக் கூட் டம், அதன் தலைவர் குமார் தலைமையில், துணைத்தலைவர் ராஜேஸ்வரி முன்னிலையில் நடந்தது. கவுன்சிலர்கள் பேசியதாவது: நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின், கமிஷனர், இன்ஜினியர், சர்வேயர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நிரந்தர அதிகாரிகளை பணி அமர்த்தாததால் பல்வேறு திட்டப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பணிகளுக்கும் நிதி ஒதுக்கியும் உடனடியாக களஆய்வு பணி நடைபெறாமல் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், வார்டு பகுதிகளில் பொதுமக்களுக்கு பதில் கூற முடியவில்லை. இதுதவிர, நகராட்சி கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுவதால் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை கூறி நிதி ஒதுக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை.பொதுமக்களின் கோரிக்கையை அதிகாரிகளிடம் கொண்டு சென்று அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்வதற்குள் தற்காலிக அதிகாரிகள் மாற்றப்படுகின்றனர். இதனால் எந்தப் பணிகளும் நகராட்சியாக தரம் உயர்த்திய பின், குறிப்பிட்ட கால நேரத்திற்குள் நடைபெறவில்லை. இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர். பதிலளித்து, நகராட்சி தலைவர் குமார் பேசியதாவது: நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதிலிருந்தே கமிஷனர் உள்ளிட்ட ஒரு சில பணியிடங்களுக்கு பொறுப்பு அடிப்படையில் தான் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இதனால், பல திட்டங்கள் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது. விரைவில் இதற்கு தீர்வு காணப்படும். குடிநீர் பிரச்னைக்கு நான்கு குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு ஒரு கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டிலும் கவுன்சிலர்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுத்து நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.