பட்டுக்கூடு கொள்முதல் தொகை வழங்காமல் இழுத்தடிப்பு; விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு
உடுமலை; உடுமலையில், விவசாயிகளிடமிருந்து பட்டுக்கூடு கொள்முதல் செய்த தொகை மற்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய 'லெவி' தொகையை வசூலிக்காததைக்கண்டித்து, பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதோடு, கஞ்சி காய்ச்சி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடுமலை அருகேயுள்ள மானுப்பட்டியில், அரசு பட்டு வளர்ச்சித்துறை மானிய திட்டத்தின் கீழ், சில்வர் லைன் பட்டு நுாற்பாலை செயல்பட்டு வந்தது. பட்டு வளர்ச்சித்துறை நடமாடும் பட்டு கொள்முதல் மையமாகவும் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு, கேரளா மாநிலம் மற்றும் கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த பட்டுக்கூடுகளை விற்பனை செய்துள்ளனர். இவ்வாறு, கொள்முதல் செய்த பட்டுக்கூடுகளுக்கு உரிய தொகையை வழங்காமல், 81 விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய, 24 லட்சத்து, 47 ஆயிரத்து, 418 ரூபாயை அந்நிறுவனம் நிலுவை வைத்துள்ளது. அதே போல், விவசாயிகளிடமிருந்து அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் என, கொள்முதல் தொகையில், 0.75 சதவீதம் மற்றும் நிறுவனம், 0.75 சதவீதம், என 1.50 சதவீதம் தொகை அரசுக்கு 'லெவி' கட்டணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு, 2019 ம் ஆண்டு முதல் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை, ரூ.1.29 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள், பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. கடந்த, ஜன., மாதம், பட்டு வளர்ச்சித்துறை , விவசாயிகள், சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் பங்கேற்ற கூட்டத்தில், மூன்று மாதத்தில் நிலுவை தொகை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால், நிறுவனம் தொகையை வழங்காத நிலையில், பட்டுவளர்ச்சித்துறை உயர் அதிகாரிகள், திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு , வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ், அந்நிறுவனத்திடமிருந்து விவசாயிகளுக்கு நிலுவை தொகையை வசூலித்து வழங்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உரிய முறையில் கடிதம் வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். விவசாயிகளுக்கு உரிய தொகையை வசூலித்து தருவதில் பட்டுவளர்ச்சித்துறை , வருவாய்த்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதை கண்டித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகள், மைவாடியிலுள்ள பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குனர் செல்வி மற்றும் போலீசார், பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்க தலைவர் செல்வராஜ், பொதுச்செயலாளர் பொன்னுசாமி, பொருளாளர் கனகராஜ் மற்றும் விவசாயிகளுடன் பேச்சு நடத்தினர். வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்காத நிலையில், விவசாயிகள் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலக வளாகத்திலேயே, அடுப்பு அமைத்து கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், உரிய தீர்வு கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்தனர். இதனால், பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் சம்மந்தப்பட்ட நிறுவனத்தை அரசு கையகப்படுத்தி, விவசாயிகளுக்கு உரிய தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால், பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தில், காலை, 10:00 மணிக்கு துவங்கி போராட்டம், மாலை, 6:00 மணிக்கு முடிவுக்கு வந்தது.