| ADDED : டிச 29, 2025 03:32 AM
பல்லடம்: கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 1 முதல் கறிக்கோழி பண்ணை வளர்ப்பு விவசாயிகள் உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அரசு தரப்பில் பேச்சு நடத்த கறிக்கோழி பண்ணையாளர் சங்கத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோழி உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, கோழிக்குஞ்சுகளை பெற்று, பண்ணைகளில் வளர்த்து, பராமரித்து விற்பனைக்கு, கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் தயார்படுத்துகின்றனர். இதற்காக, கோழி உற்பத்தி நிறுவனங்கள், பண்ணையாளர்களுக்கு, 1 கிலோ கோழிக்கு, 6.50 ரூபாய் வழங்குகின்றனர். கறிக்கோழி வளர்ப்புக்காக தேவைப்படும் செலவு அதிகரித்துள்ளதால், கூலியை, 20 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கறிக்கோழி வளர்ப்பு பண்ணை விவசாயிகள் அணி சார்பில், ஜன., 1 முதல், உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அரசு தரப்பில், கால்நடைத்துறை இயக்குநர் தலைமையில் பேச்சு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று நடக்கும் பேச்சில் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் என கறிக்கோழி பண்ணையாளர் சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.