போதைப் பழக்கம்; மீண்ட 772 பேர்
திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று 772 பேர் அப்பழக்கத்தில் இருந்து மீண்டனர். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் குடி போதைத் தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையம் செயல்படுகிறது. இங்கு பிரத்யேக டாக்டர்கள் குழுவினர், மது, புகையிலை உள் ளிட்ட போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீண்டு, இயல்புக்கு திரும்பி, புதிய வாழ்க்கை வாழ தேவையான சிகிச்சை வழங்குகின்றனர். புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பிரிவு செயல்படுகிறது. சுகாதாரமான உணவு, யோகா, தியான பயிற்சி, மனமாற்றத்திற்கான பயிற்சிகள் தரப்படுகின்றன. இந்த மையத்தில், கடந்த ஜன. - டிச. வரை ஆல்கஹால், ஒபிபாய்ட், கன்னாபிஸ் மற்றும் புகையிலை பொருட்களால் பாதிக்கப்பட்ட, 7,941 பேர் புறநோயாளிகளாவும், 1,063 பேர் உள்நோயாளிகளாவும் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். இவர்களில், 687 பேர் வெளிநோயாளிகளாவும், 85 நபர்கள் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று, குணமடைந்துள்ளனர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நல்வழிப்படுத்தலாம்: மதுவுக்கு அடிமையாகும் பலரது உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, அவர்களை நம்பியிருக்கும் குடும்பத்தாரையும் வேதனையில் ஆழ்த்துகிறது. மது மற்றும் இதர போதை பழக்கத்துக்கு, மறுவாழ்வு பெற, குடி போதை தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் செயல்படுகிறது. போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளுக்கு ஆளாகாமல் இருக்க, போதை பழக்கத்துக்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த இம்மையத்தை அணுகலாம். - அரசு டாக்டர்கள்.: