திருப்பூர்: ''புதிய வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள், திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்,'' என, ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல் பேசினார். ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகம் சார்பில் (இ.சி.ஜி.சி.), ஏற்றுமதியாளர் சந்திப்பு நிகழ்ச்சி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்தது. இ.சி.ஜி.சி., கிளை மேலாளர் தீபு வரவேற்றார். சங்கத்தின் கவுரவ தலைவர் சக்திவேல், பொது செயலாளர் திருக்குமரன், இ.சி.ஜி.சி. மண்டல மேலாளர், சிவசங்கரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கிளை மேலாளர் தீபு பேசுகையில், ''திருப்பூர் பல்வேறு சவால்களையும், மாசுக்கட்டுப்பாடு பிரச்னைகளையும் சந்தித்தது. அனைத்து சவால்களையும், வெற்றிகரமாக சமாளித்துள்ளது. இன்று, திருப்பூர் ஒரு முழுமையான பசுமை நகரமாக திகழ்கிறது. திருப்பூர் ஏற்றுமதியாளரின் வெற்றி பயணத்தை எவ்வித சவால்களாலும் தடுக்க இயலாது. புதிய சந்தைகளை அடையாளம் காண்வதில், இ.சி.ஜி.சி. முழு ஆதரவை வழங்க தயாராக உள்ளது. இ.சி.ஜி.சி. பாலிசி எடுப்பதன் மூலமாக, தொழிலில் வரும் சவால்களையும் தைரியமாக சமாளிக்க முடியும்,'' என்றார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல் பேசியதாவது: இ.சி.ஜி.சி. புதிய காப்பீடு திட்டங்கள் அறிமுகம் செய்து வருகிறது.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், 30 ஆண்டுகளாக, ஏற்றுமதி வர்த்தகத்தை பாதுகாத்து வருகிறது; ஏற்றுமதியாளர்களுக்காக குரல் கொடுப்பது மிகவும் பெருமையாக உள்ளது. இ.சி.ஜி.சி. காப்பீடு பிரீமியம் என்பது ஒரு முதலீடு மட்டுமே; செலவு அல்ல. எத்தனை இன்னல்கள் வந்தாலும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் 'பீனிக்ஸ்' பறவை போல மீண்டு வருவார்கள். இங்கிலாந்துடன் ஏற்பட்டுள்ள வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மற்றும் ஐரோப்பாவுடன் வரைவில், ஏற்படக்கூடிய வர்த்தக ஒப்பந்தம், திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். நடப்பாண்டில், ஏற்றுமதியில் குறைந்தபட்சம் 25 சதவீதம் அதிகரிக்கும். இவ்வாறு, அவர் பேசினார். பொது செயலாளர் திருக்குமரன்: ஏற்றுமதியாளர்கள், இ.சி.ஜி.சி. பாலிசி எடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏற்றுமதியாளர்கள் 'ரேட்டிங்' ஏஜென்சி வாயிலாக, 'பையர்ஸ் ரேட்டிங் ரிப்போர்ட்' பெறும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். இதன் வாயிலாக, வர்த்தகர்களின் பணம் செலுத்தும் வரலாறு, நிதி நிலை, வருமானம் உள்ளிட்ட முக்கிய தகவல்களும் இடம்பெறும்; இதன்மூலமாக, பாதுகாப்பாக வர்த்தகம் செய்யலாம். இ.சி.ஜி.சி. பொது மேலாளர், கவுரவ் அன்ஷூமான்: இந்திய ஏற்றுமதியாளர்கள் தற்பொழுது சந்திந்து வரும், அமெரிக்க வரி விதிப்பு பிரச்னை வருத்தம் அளிக்க கூடியதாக இருக்கிறது. இருப்பினும், இது புதிய சந்தை வளர்ச்சிக்கு வாய்ப்பு அளிப்பதாக அமைந்துள்ளது. ஏற்றமதியாளர்கள், தங்களுடைய வியாபாரத்தில் குறைந்தபட்சம் 35 சதவீதம் ஏற்றுமதி செய்பவர்களுக்கு, அந்நிறுவனத்தின் உள்நாட்டு வர்த்தகத்துக்கும், இ.சி.ஜி.சி. காப்பீட்டு வசதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் 'டாலர் சிட்டி', ஆண்டுதோறும், 20 சதவீத வளர்ச்சி பெற்று வருகிறது. இ.சி.ஜி.சி. காப்பீட்டு பலன்களை எளிதாக பெறலாம். திருப்பூர் ஏற்றுமதியாளருக்காக, பிரத்யேக காப்பீடுகள் உள்ளன