கைக்கு எட்டாத முதலீட்டு மானிய திட்டம் சாய ஆலை உரிமையாளர்கள் கவலை
திருப்பூர்:'முதலீட்டு மானிய திட்டம் இருந்தும், கடுமையான விதிமுறைகளால் பயன் பெற முடியாது' என, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன், பொருளாளர் மாதேஸ்வரன் கூறியதாவது: பத்து ஆண்டுகளுக்கு மேலாக, சாய ஆலைகளில், புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்த இயலவில்லை. அதற்காக மானியம் வழங்கிய 'டப்' திட்டத்தை மத்திய அரசு நிறுத்திவிட்டது. இதற்கிடையில், தமிழக அரசு அறிவித்த முதலீட்டு மானிய திட்டத்தில், 25 சதவீத மானியத்துடன், தொழில்நுட்பத்தை மேம்படுத்தலாம் என, மகிழ்ச்சி அடைந்திருந்தோம். அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகள் கடுமையாக இருப்பதால், திருப்பூர் பயன்பெற முடியாது. தமிழக அரசு பட்டியலிட்டுள்ள, 13 வகையான, குறு, சிறு தொழில்கள் பட்டியலில், திருப்பூர் சாய ஆலைகள் இடம்பெறவில்லை; சாயத்தொழிலை இணைக்க வேண்டும். முதலீட்டு மானிய திட்டத்தில், 15 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும் என்கின்றனர். இயங்கி வரும் தொழிலில், அவ்வளவு முதலீடு செய்ய முடியாது. தேவையெனில், 5 கோடி ரூபாய் வரை, 5 முதல் 10 கோடி ரூபாய், 10 முதல், 15 கோடி ரூபாய் என, மூன்று பிரிவாக பிரித்து, மானியம் வழங்க முன்வர வேண்டும். நம் நாட்டிலேயே, திருப்பூரில் மட்டும் தான், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. அத்தகைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைக்காக, சிவப்பு வகைப்பாட்டில் இருந்து, திருப்பூர் சாய ஆலைகளுக்கு சலுகை வழங்க வேண்டும். தமிழக அரசு, பதப்படுத்தும் தொழில்களுக்காக அறிவித்த முதலீட்டு மானிய திட்டத்தில், நாங்களும் பயன்பெறும் வகையில், விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.