உடுமலை;அமராவதி ஆற்றங்கரை கிராமங்களில், சோழர்கள் ஆட்சிக்கான சான்றுகள் குறித்து, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஆய்வு செய்து, பழங்கால சிலைகளை கண்டறிந்து ஆவணப்படுத்தினர்.உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகும் சிற்றாறுகள் ஒருங்கிணைந்து, அமராவதி ஆறாக மாறி, காவிரியில் கலக்கிறது. இந்த ஆற்றங்கரையில், நதிக்கரை நாகரிகம் செழித்திருந்தது குறித்து, பல்வேறு ஆய்வுகள் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள, 'கரைவழி' எனப்படும் அமராவதி ஆற்றங்கரை கிராமங்களில், சோழர்கள் ஆட்சி செய்ததற்கான சான்றுகள் குறித்து, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர், தொடர் கள ஆய்வு செய்து வருகின்றனர்.அக்குழுவினர் கூறியதாவது: அமராவதி ஆற்றங்கரையில், சோழர்கள் ஆட்சிக்கு சான்றாக, சோழமாதேவி உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன.பல நுாற்றாண்டுகள் கடந்தும், மக்களின் வழக்காற்று சொற்களில், மன்னர்கள் ஆட்சி குறித்த, பல்வேறு தகவல்கள் கிடைத்து வருகிறது.அவ்வகையில், சோழராஜ கோவில், சோழன் கல், சோழ சமாதி, ராசானடியான் கோவில் உள்ளிட்ட பெயர்கள் தற்போதும் புழக்கத்தில் உள்ளது.அவ்வகையில், சோழமாதேவி கிராமத்துக்கும் கிழக்கே, ராஜவாய்க்கால் பகுதியில் கணியூருக்கும் வடக்கே, வயல்வெளி பகுதியில், பழமை வாய்ந்த வழிபாட்டு தலம் உள்ளது.அங்கு, இரண்டடி உயரம் உள்ள கற்சிலையில், தலையில், தலைப்பாகை அல்லது கிரீடம் போன்ற அமைப்புடன், ஒரு அரசன் அமர்ந்து இருப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளது.இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்ட போது, 'இது சோழராஜகோவில் எனவும், அறுவடை காலங்களில், அங்கு பொங்கல் வைத்து, வழிபட்ட பிறகே அறுவடையை துவக்குவோம். ராசனடியான் கோவில் எனவும் இக்கோவிலை வணங்குகிறோம். சோழ ராஜா வாழ்ந்துமறைந்த பகுதி,' எனவும் தெரிவித்தனர்.தொடர் ஆய்வில், நீர்நிலைகளுக்கு அருகில், பெருந்தெய்வ வழிபாடுகள் துவங்கி, தற்போது வரை நீடிப்பதும், அருகில், மன்னர்கள் நினைவிடம் போன்று, பள்ளிப்படை கோவில்கள் அமைத்து, பூஜைகள் மேற்கொள்ளப்படும் உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.இந்த ஆய்வில், ஆய்வாளர் விஜயலட்சுமி, வரலாற்று பேராசிரியர் ராபின், ேஹானாெஷர்லி, முனியப்பன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.