உடுமலை:உடுமலையில் இயக்கப்படும் சில அரசு டவுன் பஸ்களில், பழைய 'பேட்டரி' புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் பயன்படுத்தப்படுவதை தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது.உடுமலையில் செயல்படும், அரசு போக்குவரத்துக்கிளையில், 36 புறநகர் பஸ், 58 டவுன் பஸ்கள் உள்ளன. அவ்வகையில், பல்வேறு வழித்தடங்களில், 50க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.இங்குள்ள டவுன் பஸ்களில் பெரும்பாலானவை, வெளியூரில் இயக்கப்பட்டு, காலாவதியான நிலையில், இந்த கிளைக்கு வழங்கப்பட்டவை.அதனால், கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் சில டவுன் பஸ்களில், பயணிகள் ஏறும் படிக்கட்டில் உடைப்பு, கதவு மற்றும் ஜன்னல் ஓரக்கண்ணாடிகள் இல்லாமை, பேட்டரி பழுது என, பல பிரச்னைகள் உள்ளன.இதில், பேட்டரி சரியாக செயல்படாத பஸ்களை, தள்ளிவிட்டு, 'ஸ்டார்ட்' செய்யும் நிலை உள்ளது. இதனால், ஏதேனும் ஒரு பகுதியில், பஸ் இன்ஜின் இயக்கத்தை நிறுத்தினால், மீண்டும் 'ஸ்டார்ட்' செய்ய டிரைவர்கள் சிரமப்படுகின்றனர். பஸ்சை 'ஸ்டார்ட்' செய்த நிலையிலேயே நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.பயணியர் கூறுகையில், 'அரசு பஸ்களில் பேட்டரி பயன்பாடு பரிசோதிக்கப்படுகிறது. ஆனால், பழைய பேட்டரி புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. புதிய பேட்டரி வழங்க அரசு முனைப்பு காட்ட வேண்டும். அதன் வாயிலாக, இப்பிரச்னைக்கு தீர்வு எட்டப்படும்,' என்றனர்.