மானிய விலையில் நெல் விதைகள் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
உடுமலை; அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில் நெல் சாகுபடி துவங்கியுள்ள நிலையில், வேளாண் துறை வாயிலாக மானிய விலையில் நெல் விதைகள் வினியோகம் செய்யப்படுகிறது,உடுமலை வட்டாரம், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், கல்லாபுரம் பகுதிகளில், இரண்டாம் பருவம் நெல் சாகுபடிக்காக, அமராவதி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ள நிலையில், இப்பகுதிகளில் இடைவிடாமல், தொடர்ந்து நெல் சாகுபடி செய்யப்படுவதால், மண் வளத்தை மேம்படுத்தும் வகையில், நெல் நடவுக்கு முன், ஒரு ஏக்கருக்கு, 100 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரம், நெல் நுண்ணூட்டம், 5 கிலோ, திரவ உயிர் உரங்கள், ஒரு லிட்டர் ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும்.இவ்வாறு செய்யும் போது, மண் வளம் பெருகி, பயிர் வளர்ச்சி சிறப்பாக அமைவதோடு, மகசூல் அதிகரிக்கும். மேலும், வேளாண் துறை வாயிலாக, விவசாயிகளுக்கு, கோ-51, கோ-55, ஏ.டி.டி.,-45 ஆகிய சான்று பெற்ற நெல் விதைகள், தேவையான அளவு இருப்பு உள்ளது. இந்த வகை நெல் ரகங்கள் நோய் எதிர்புசக்தி உள்ளதுடன், அதிக மகசூல் திறன் உள்ளதாகும்.எனவே, நெல் சாகுபடி விவசாயிகள் இந்த ரகங்களை வேளாண் துறையில் மானிய விலையில் பெற்று நடவு செய்து பயன்பெறுமாறு, வேளாண் உதவி அலுவலர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.