உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உழவர் சந்தை வெள்ளி விழா கொண்டாட்டம் கேள்விக்குறி?

உழவர் சந்தை வெள்ளி விழா கொண்டாட்டம் கேள்விக்குறி?

திருப்பூர்; உழவர் சந்தைகள், 25 ஆண்டு கடந்ததை நினைவுகூறும் வகையில் உழவர் சந்தை கொண்டாட்டம் என்ற திட்டம் உருவாக்கி, நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது, இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.முன்னாள் முதல்வர் கருணாநிதி, 1999ல், மதுரையில் முதல் உழவர் சந்தையை துவக்கி வைத்தார்.மாநிலம் முழுதும், 39 மாவட்டங்களில், 193 உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. விளைபொருட்களை பயிரிட்டு, விளைச்சல் கண்ட விவசாயிகள், இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க, உழவர் சந்தைகள் இன்றும் பெரிதும் உதவுகிறது. உழவர் சந்தைகள், 25 ஆண்டுகள் நிறைவு பெற்று, வெள்ளி விழா காண உள்ளன.இதற்கான கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு, உழவர் நலன் மற்றும் வேளாண் விற்பனை, வணிகத்துறை, 2023 இறுதியில் தயாரானது. கடந்த, 2024ம் ஆண்டு நீண்ட நாட்கள் உழவர் சந்தையில் பணியாற்றிய அலுவலர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, உழவர் சந்தைக்கான சிறப்பு மலர் (புத்தகம்) தயாரிப்பு பணிகளும் துவங்கப்பட்டன. குழுவினர், மாநிலத்தின் பல்வேறு பகுதியில் செயல்படும் உழவர் சந்தைகளின் செயல்பாடு, அதிகளவில் வரத்து, மெச்சத்தகுந்த வருவாய் ஈட்டித்தந்த சந்தை, கொரோனா போன்ற இக்கட்டான கால கட்டத்திலும் மக்களுக்கு உதவிய சந்தை, அதிக விளை பொருட்களை கொண்டு வந்து சேர்க்கும் விவசாயிகள் உட்பட பல்வேறு தலைப்புகளில் மலருக்கான தகவல்களை சேகரித்தனர்.ஆண்டின் பிற்பாதியில், 2024ல் மதுரை அல்லது வேறு பகுதியில் உழவர் சந்தை வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு, வேளாண் மற்றும் வணிக விற்பனை துறை கோப்புகளை கிடப்பில் போட்டு விட்டது. குழுவில் இடம் பெற்றவர்கள், நீண்ட நாட்களாக பணியாற்றும், மாவட்ட அளவிலான உழவர் சந்தை பொறுப்பு அலுவலர்கள் வெள்ளி விழா கொண்டாட்டம் நடத்தினால், உழவர் சந்தை தனிப்பெயரை மீண்டும் காப்பாற்ற முடியும். தமிழக அரசு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி