பண்ணை குட்டை அமைக்க விவசாயிகள் கோரிக்கை
உடுமலை; 'தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், விளைநிலங்களில், பண்ணைக்குட்டை அமைக்க, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்,' என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், கிணறு மற்றும் போர்வெல்லை ஆதாரமாக கொண்டு, பல ஆயிரம் ஏக்கரில், விவசாய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் போதும், கோடை காலத்திலும், போர்வெல்களில் இருந்து கிடைக்கும் தண்ணீரை, பண்ணைக்குட்டைகளில், தேக்கி, சாகுபடிக்கு பயன்படுத்துகின்றனர். மழைக்காலங்களில், கிடைக்கும் தண்ணீரையும், இக்குட்டைகளில் தேக்கி வைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.ஆனால், பண்ணைக்குட்டை அமைக்க அதிக செலவு பிடிப்பதால், சிறு, குறு விவசாயிகள் பாதிக்கின்றனர்.விவசாயிகள் கூறியதாவது: குறைந்த வரத்துள்ள போர்வெல்களில், கிடைக்கும் தண்ணீரை, பண்ணைக்குட்டைகளில் தேக்கி வைத்து, அதிலிருந்து சீராக விளைநிலங்களுக்கு நீர் பாய்ச்சலாம்.ஆனால், பல அடி உயரத்துக்கு, கரை ஏற்படுத்தி, பாலித்தீன் 'ஷீட்' பரப்ப அதிக செலவாகிறது. தற்போது, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், விவசாயம் சார்ந்த பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை.ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்துறை சார்பில், பண்ணைக்குட்டை அமைப்பதன் முக்கியத்துவம், குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, திட்ட தொழிலாளர்களை கொண்டு பண்ணைக்குட்டை அமைத்து கொடுக்கலாம்.இதனால், விவசாயிகள், தொழிலாளர்கள் என இரு தரப்பினரும் பயன்பெறுவார்கள். இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.