அக். 1ல் துவங்குகிறது வடகிழக்கு பருவமழை பேரிடர் எதிர்கொள்ள தீயணைப்பு துறை தயார் நிலை
திருப்பூர் : வடகிழக்கு பருவம் துவங்க உள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில், பேரிடர் கால மீட்பு பணிகளில் ஈடுபட தீயணைப்பு துறையினர் தயாராக உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை, சராசரி அளவைவிட கூடுதலாக பெய்து, மாவட்டத்தை வறட்சியின் பிடியிலிருந்து மீட்கிறது. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை. மாவட்டத்தின் தென்மேற்கு பருவ இயல்பான மழை அளவு 154.80 மி.மீ., ஆக உள்ளநிலையில், இதுவரை 57.80 மி.மீ., அளவே மழை பெய்துள்ளது.இன்னும் மூன்று நாட்களில் தென்மேற்கு பருவம் நிறைவடைகிறது. வரும் அக்., 1ல் வடகிழக்கு பருவம் துவங்குகிறது. வடகிழக்கு பருவத்தில் மாவட்டத்தின் இயல்பான மழை பொழிவு, 314.30 மில்லி மீட்டராக உள்ளது. கடந்த ஆண்டுகள் போலவே இந்தாண்டும், வடகிழக்கு பருவத்தில் இயல்பைவிட அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது. இதனையடுத்து, மழைக்கால பாதிப்புகளை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக, கலெக்டர் தலைமையில், அனைத்து துறையினர் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டு, பேரிடர் காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், 41 பகுதிகள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை தங்கவைப்பதற்காக 52 நிவாரண முகாம்கள் தயார் படுத்தப்பட்டுவருகின்றன. பேரிடரின் போது மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, பாம்பு பிடிப்பவர்கள், நீச்சல் தெரிந்தோர் உள்பட முதல்நிலை தன்னார்வலர்கள் 657 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். பேரிடர் காலங்களில் மக்கள் தகவல் தெரிவிப்பதற்காக, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் வெள்ள கட்டுப்பாட்டு அறை, வரும் 1ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. வழங்கல் பாதிக்க கூடாது மழைக்காலத்திலும், கார்டுதாரர்களுக்கு தட்டுப்பாடு இன்றி ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட வேண்டும் என, மாவட்ட வழங்கல் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளதா என உறுதி செய்யவேண்டும்; தாழ்வான பகுதிகளில் உள்ள ரேஷன்கடைகளில், மழையால் உணவு பொருட்கள் பாதிக்காதவகையில் உறுதி செய்யவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில், மக்களை பத்திரமாக மீட்பது, முறிந்து விழும் மரங்கள் உள்ளிட்ட இடையூறுகளை அகற்றுவது என, தீயணைப்பு துறையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது. அந்தவகையில், வடகிழக்கு பருவமழையை திறம்பட எதிர்கொள்ள, மாவட்ட தீயணைப்பு துறை முழு ஆயத்த நிலையில் உள்ளது. தீயணைப்பு துறையினர் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில், பத்து தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் தீயணைப்பு துறை வசம் உள்ளது. நிலையத்துக்கு ஐந்து பேர் வீதம் 50 நீச்சல் வீரர்கள் உள்ளனர்; 13 மரம் அறுக்கும் கருவிகள் உள்ளன. n அரசு துறைகள் போலவே, பொதுமக்களும் தயாராக இருக்கவேண்டும். மின் விபத்து அபாயம் உள்ளதால், வீடுகளில் பழுதடைந்த மின்சாதனங்கள், ஒயரிங் குறைபாடுகள் இருப்பின் உடனடியாக சரி செய்து கொள்ளவேண்டும். n குழந்தைகளை நீர் நிலைகள், மின்கம்பங்களுக்கு அருகே செல்ல விடக்கூடாது. மழை வெள்ளம் பெருக்கெடுத்து, சாக்கடை கால்வாய்கள் நிரம்பும். தண்ணீர் சூழ்ந்து, சாக்கடை கால்வாய்க்கும், சாலைக்கும் வேறுபாடு தெரியாமல், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சாக்கடை கால்வாய்க்குள் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. n உள்ளாட்சி அமைப்புகள், சாக்கடை கால்வாய் ஓரங்களில், தற்காலிக தடுப்புகளை அமைக்கலாம். n கோடை கால மழையின்போது, ரயில்வே பாலம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் டூவீலரில் சென்றவர் இழுத்துச்செல்லப்பட்ட சம்பவத்தை நினைவில் கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் ஆபத்தான பகுதிகளில் பயணிப்பதை தவிர்க்கவேண்டும். n தீயணைப்பு துறை சார்பில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேரிடர் கால மீட்பு குறித்து ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.