உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பயிர் பாதுகாப்பில் கவனம்; தோட்டக்கலைத்துறை அட்வைஸ்

பயிர் பாதுகாப்பில் கவனம்; தோட்டக்கலைத்துறை அட்வைஸ்

உடுமலை : உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, தக்காளி, கத்தரி, மிளகாய் உள்ளிட்ட சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பருவமழை துவங்கியுள்ள நிலையில், தோட்டக்கலை பயிர்களில் பாதிப்பை தவிர்க்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.அத்துறையினர் கூறியதாவது:பருவமழை காலத்தில் பயிர் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாழை, மரவள்ளி, சின்னவெங்காயம், மிளகாய், தக்காளி மற்றும் கொத்தமல்லி போன்ற பயிர்களுக்கு உரிய நேரத்தில் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.அனைத்து வயல்களிலும் அதிக தண்ணீர் தேங்காதவாறு, உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். நீர்ப்பாசனம் மற்றும் உரமிடுதலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்.காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க, காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில், குச்சிகளால் முட்டுக்கொடுத்து புதிதாக நடவு செய்த செடிகள் சாயாமல் பாதுகாக்க வேண்டும்.கொய்யா, எலுமிச்சை போன்ற பல்லாண்டு பயிர்களில், காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றி, நல்ல காற்றோட்டம் கிடைக்கும் வகையில் கவாத்து செய்ய வேண்டும்.காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில், வாழை இலைகளை அகற்றி விட்டு, மரத்தின் அடியில் மண் அணைக்க வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்த வேண்டும்.மேலும், விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு, அத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ