| ADDED : டிச 10, 2025 09:12 AM
அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி, முதல் மண்டலம், 10வது வார்டு, ஆத்துப்பாளையம் நல்லாற்றின் ஓரத்தில் பல்வேறு வார்டுகளில் சேகரமாகிய குப்பைகளை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களாக கொட்டி வந்துள்ளனர். இதனை அறிந்த பா.ஜ மற்றும் அப்பகுதி மக்கள் ஆற்றின் ஓரத்தில் குப்பை கொட்ட கூடாது. நீர் நிலை பாதிக்கப்படும். துர்நாற்றத்தால் குடியிருக்க முடியாது. எனவே கொட்டிய குப்பையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், என குப்பை கொட்ட வந்த லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மாநகராட்சி முதல் மண்டல உதவி கமிஷனர் கணேஷ்குமார், பா.ஜ. நிர்வாகிகள் மற்றும் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில், 'இன்னும் ஒரு வாரத்தில், நல்லாற்றின் ஓரம் கொட்டப்பட்ட குப்பைகள் அனைத்தும் அப்புறப்படுத்தபடும்,' என உறுதி கூறினார். இதனால், அனைவரும் கலைந்து சென்றனர்.