கட்டி முடித்து பூட்டிக்கிடக்கும் விடுதிகள்; தங்குமிடம் கிடைக்காமல் தொழிலாளர்கள் பரிதவிப்பு
திருப்பூர்; 'வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்' என்று, ஒட்டுமொத்த தமிழ்நாடும், ஒரு காலத்தில் பனியன் தொழில் நகரை போற்றிக்கொண்டிருந்தது. வேலை தேடி வந்தவர்கள், குடும்பத்துடன் தங்கி வேலைபார்த்து, மண்ணின் மைந்தர்களாகவே மாறிவிட்டனர். அசுரவளர்ச்சியில் ஓடிக்கொண்டிருந்த பனியன் தொழிலுக்கு, தமிழக தொழிலாளர்கள் போதவில்லை.இதனால், வெளிமாநிலங்களில் இருந்தும் தொழிலாளர் வரவழைக்கப்பட்டனர். இலகுவான வேலைக்கு, கைநிறைய சம்பளம் என்று தகவல் பரவிய பிறகு, வடமாநிலங்களை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி திருப்பூர் வரத்துவங்கினர். இன்று நேற்றல்ல, பத்து ஆண்டுகளுக்கு மேலாக, வடமாநில தொழிலாளர்களும், திருப்பூர் பனியன் நிறுவனங்களின் தொழிலாளராக மாறியுள்ளனர். வேலைதேடி வருவோருக்கு, பாதுகாப்பான தங்குமிட வசதி இல்லாதது, இன்றும் திருப்பூரின் பெரிய குறையாக உள்ளது. முன்னணி தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களை தங்க வைக்க, தனியே விடுதிகள் அமைத்துள்ளன. இருப்பினும், நடுத்தர மற்றும் குறு சிறு நிறுவனங்களில் உள்ள வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள், பாதுகாப்பான தங்குமிட வசதியில்லாமல் தவிக்கின்றனர்.பனியன் தொழிலை பொறுத்தவரை, உற்பத்தி பிரிவில், 80 சதவீதம் பெண் தொழிலாளர்களையே கொண்டுள்ளது. திருப்பூரை நாடி வரும் பெண் தொழிலாளர்கள், பாதுகாப்பான தங்குமிட வசதியில்லாம், மீண்டும் திரும்பி செல்லும் அவலமும் தொடர்கிறது. 'மத்திய, மாநில அரசுகள், தொழிலாளர் தங்குமிட வசதியை ஏற்படுத்த வேண்டும்' என்ற ஒற்றை கோரிக்கை, நீண்ட நெடிய நாட்களாக நிலுவையிலேயே இருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டில், அ.தி.மு.க., ஆட்சியின் போது, 'சிட்காட்' திட்டத்தில், தொழிலாளர் தங்கும்விடுதிகள் அமைக்கப்பட்டன.விடுதிகளை நடத்த வழியில்லாததால், மொத்தமாக நிறுவனங்களிடம் ஒப்படைத்து; அந்நிறுவனங்களே பராமரித்து, தொழிலாளர்களை தங்க வைத்திருந்தன. கொரோனா காலகட்டத்தில் காலியான விடுதிகள், இதுவரை பயன்பாடில்லாமல் வீணாக பூட்டி வைக்கப்பட்டுள்ளன.ஒப்படைக்க வேண்டும்
பின்னலாடை தொழில்துறையினர் கூறுகையில், 'தொழிலாளர் வசதிக்காக கட்டிய விடுதிகளை, நிறுவனங்களே நடத்தி வந்தன. கொரோனாவுக்கு பின், ஐந்து ஆண்டுகளாக வீணாக பூட்டியே கிடக்கிறது. தொழிலாளர், தங்குமிட வசதியில்லாமல் பரிதவிக்கின்றனர்; மற்றொருபுரம், விடுதி கட்டடங்கள் பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளன. திருப்பூரை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், இதுதொடர்பாக தமிழக அரசிடம் பேசி, தொழிலாளர் தங்கும் விடுதிகளை திறந்து, பயன்பாட்டுக்கு ஒப்படைக்க ஆவன செய்ய வேண்டும்,' என்றனர். நெருப்பெரிச்சல் - சமத்துவபுரம் அருகே கட்டப்பட்ட ஆண் தொழிலாளர் தங்கும் விடுதி திறக்கப்படாமல் பாழ்பட்டு வருகிறது.
50 சதவீத மானியம்
ஏற்றுமதியாளர்கள் சிலர் கூறுகையில்,'வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான தங்குமிட வசதி இல்லை என்ற குறை பரவலாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள், 50 சதவீத மானியம் வழங்கி ஊக்குவித்தால், தொழிலாளர் தங்குமிட வசதியை ஏற்படுத்த முடியும். தொழில் வளர்ச்சியால் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் தொழிலாளர்களுக்காக, அரசு திட்டம் உருவாக்கப்பட வேண்டும். தொழிற்பூங்கா அமைக்கும் திட்டத்தில், தொழிலாளர் விடுதியையும், அதே வளாகத்தில் அமைக்க திட்டமிட வேண்டும்,' என்றனர்.