விவசாயிகளின் தேவை எவ்வாறு புரியும்?
பல்லடம்: 'தமிழகம் தலை நிமிர' என்ற தலைப்பில், சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று செஞ்சேரிமலையில், விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தினர். பா.ஜ., மாவட்டத் தலைவர் மாரிமுத்து வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், விவசாய அணி தலைவர் நாகராஜ், சூலுார் எம்.எல்.ஏ., கந்தசாமி, உ.உ.க., மாநிலத் தலைவர் செல்லமுத்து, த.மா .கா., மாவட்ட விவசாய அணி தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தனர். அப்போது, பா.ஜ. தலைவரிடம், விவசாயிகள் கூறியதாவது: வெள்ளை ஈ தாக்குதலால், தென்னைகள் பெரிதும் பாதிக்கின்றன. இதற்காக மருந்தை பயன்படுத்தினால், மரங்கள் காய்வதுடன், விளைச்சலும் பாதிக்கிறது. பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும், இங்கு மருந்துகளை விற்பனை செய்ய முயன்று வருகின்றன. அவற்றை தடை செய்ய வேண்டும். இவற்றால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், நாம் உண்ணும் உணவும் விஷமாகி வருகிறது. கொரோனாவுக்கு முன், பட்டுக்கூடுகள் அனைத்தும் அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் தான் வியாபாரம் செய்யப்பட்டன. தற்போது இடைத்தரகர்களால் கொள்முதல் நடப்பதால் அவர்கள் செழிக்கின்றனர். விவசாயிகளை கேட்காமல் விவசாயிகளின் தேவைகள் எவ்வாறு புரியும்? அதிகாரிகளே நடவடிக்கை எடுக்காமல், விவசாயிகளுடன் ஆ லோசிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.