குப்பைகள் வந்தது எப்படி? கிராம மக்கள் கேள்வி
பல்லடம்; ''கண்காணிப்புகளை மீறி, பல நுாறு டன் குப்பைகள், கழிவுகள் கிராமத்துக்குள் வந்தது எப்படி?'' என, அனுப்பட்டி கிராம மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். பல்லடம் அடுத்த, அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில், குப்பை கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர். நேற்று முன்தினம் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நுாற்றுக்கணக்கான யூனிட் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டதும், அதனால் ஏற்பட்ட பள்ளத்தை, பல நுாறு டன் குப்பைகள், கழிவுகளை கொட்டி மூட முயற்சித்ததும் பொதுமக்களால் வெளிச்சத்துக்கு வந்தது. காமநாயக்கன்பாளையம் போலீசார், வருவாய் துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கண்காணிப்புகளை மீறி, நுாற்றுக்கணக்கான டன் குப்பைகள், கழிவுகள் விதிமுறை மீறி கிராமத்துக்குள் வந்தது எப்படி என, பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பொதுமக்கள் கூறுகையில், 'பட்டா நிலம் என்றாலும், கனிம வளத்தை வெட்டி எடுக்க வருவாய்த் துறையில் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு இருக்க, பட்டா நிலத்திலிருந்து நூற்றுக்கணக்கான யூனிட் மண் கடத்தப்பட்டதுடன், விதிமுறை மீறி பல்வேறு இடங்களில் இருந்து, குப்பைகள், கழிவுகள் தருவிக்கப்பட்டு, இங்கு மலை போல் குவிக்கப்பட்டுள்ளன. கோவை, சூலுார், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, கழிவுகள், குப்பைகள் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. போலீஸ் செக் போஸ்ட், வருவாய்த்துறை அதிகாரிகளின் கண்காணிப்பு, 'சிசிடிவி' இவற்றையெல்லாம் மீறி, எவ்வாறு இங்கு கனிம வள கடத்தல் நடந்தது? மேலும், விதிமுறை மீறி பல நுாறு டன் குப்பைகள், கழிவுகள் இங்கு வந்தது எப்படி? எனில், அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக இருந்தார்களா என்ற சந்தேகம் எழுகிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் நான்கு மாதத்துக்கு முன்பே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் சந்தேகம் வலுக்கிறது. கூடுதல் விசாரணை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட வேண்டும்' என்றனர். சிறைபிடிக்கப்பட்ட லாரி மாயம் நேற்று முன்தினம், குப்பை கொட்டவந்த லாரியை, வருவாய்த்துறை மற்றும் காமநாயக்கன்பாளையம் போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதனையடுத்து, புகார் அளிக்க வேண்டி பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷன் செல்ல, சிறைபிடிக்கப்பட்ட லாரி மாயமானது. பொதுமக்களுடன் சமாதானம் ஏற்பட்டதால், லாரி விடுவிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அபராதம் விதிக்காமலும், வழக்கு பதியாமலும், லாரியை விடுவித்தது, அதிகாரிகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.