திருப்பூர்: திருப்பூர் எம்.பி.,க்கு ஆதரவான அவரது ஆதரவாளர்களின் பதிவு, கூட்டணி கட்சிக்கே குட்டு வைப்பது போன்று உள்ளது என, கட்சியினர் கலாய்க்கின்றனர்.திருப்பூர் லோக்சபா தொகுதி, தி.மு.க., கூட்டணியில், இ.கம்யூ.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் 'சிட்டிங்'எம்.பி., சுப்பராயன், கடந்த ஐந்தாண்டில் தனது தொகுதிக்கு உட்பட்ட இடத்திற்கு எங்கெங்கு சென்றார்; எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்தார் என்பது, அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.இந்நிலையில், தொகுதிக்குட்பட்ட பர்கூர் மலைவாழ் மக்களுக்கு சமுதாயக்கூடம் அமைக்க, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அந்த தகவலை வைரலாக்கி வருகிறார் எம்.பி., சுப்பராயன்.அந்த பதிவில் மேலும் கூறியுள்ளதாவது;சுதந்திரம் பெற்ற, 75 ஆண்டுகளை கடந்த பின்னர் தான் தனது முயற்சியில், அங்குள்ள கொங்காடை என்ற கிராமத்துக்கு அரசு பஸ் ஓடிக் கொண்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகள், அரசு இயந்திரங்கள் நுழையாத அந்த பழங்குடியின கிராமத்துக்கு, தார் சாலை முதல், மருத்துவமனை வரை, கடந்த 5 ஆண்டுகளில் செய்து கொடுத்திருக்கிறேன்.இதெல்லாம் ஓட்டுக்காக செய்யப்பட்டவையெனில், சொற்ப எண்ணிக்கையில் உள்ள ஓட்டுகளுக்கு இத்தனை மெனக்கெடல் தேவையில்லையே.தனக்கு ஒதுக்கப்பட்ட பெருமளவு நிதியை, இதுபோன்ற அடிப்படை வசதி இல்லாத பகுதிகளுக்கே செலவழித்துள்ளேன்' என்ற தகவலுடன், ''நவீன உலகின் அடிப்படை வாய்ப்புகள் கூட மறுக்கப்பட்ட அந்த மலைவாழ் மக்களுக்கு, நாம செய்யலைன்னா, வேற யாரு செய்யப்போறாங்க'' என்ற வரியுடன் நிறைவு செய்திருக்கிறார்.'இந்த பதிவு, கூட்டணி கட்சியான தி.மு.க.,வுக்கே குட்டு வைப்பது போன்றல்லவா இருக்கிறது' என, கலாய்க்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.