திருப்பூர்:''மந்தமாக இருந்த திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி சூடுபிடித்துள்ளது; தற்போது 10 சதவீதம் அதிகரித்துள்ளது; நாளையே ஒரு லட்சம் பேர் வந்தாலும், உடனடியாக வேலை தர திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் தயாராக உள்ளன'' என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிறுவனத்தலைவர் சக்திவேல் கூறினார்.ஏற்றுமதியாளர்கள் சங்க பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள், அரசு சாரா அமைப்புகள், அரசு பிரதிநிதிகள் அடங்கிய, திருப்பூர் தொழில்முறை பங்களிப்போர் கூட்டமைப்பு (ஸ்டாக்ேஹால்டர்ஸ் போரம்) கடந்தாண்டு துவக்கப்பட்டது. திருப்பூர் பின்னலாடைத் தொழில் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, நல்ல முன்னேற்றத்துக்கு வழிகாட்டுவது போன்ற பணிகளை செய்து வருகிறது.கூட்டமைப்பின் முதல் மாநாடு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஏற்றுமதியாளர் சங்க பொதுசெயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், துணைத்தலைவர் ராஜ்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.அரண்இளங்கோவன், தலைவர், திருப்பூர் தொழில்முறை பங்களிப்போர் கூட்டமைப்பு:திருப்பூர் தொழில்முறை பங்களிப்போர் கூட்டமைப்பு, ஒட்டுமொத்த பின்னலாடைத் தொழிலுக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கும்.திருப்புமுனைசுப்ரமணியன், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்: 34 ஆண்டுகளாக பின்னலாடை தொழிலில் பயணித்துக்கொண்டிருக்கிறோம். புதிய குழுவுடன், தொழில்முறை பங்களிப்போர் கூட்டமைப்பு, முதல் மாநாடு நடத்துவது, பின்னலாடை தொழிலில் திருப்புமுனையாக அமையும். அனைத்து தரப்பினரும் அங்கமாக இருப்பதால், எத்தகைய பிரச்னைகளாக இருந்தாலும், கூட்டமைப்பு நிரந்தர தீர்வை வழங்கும்.; வளர்ச்சிக்கும் வழிகாட்டும்.பிரமிப்புசக்திவேல், நிறுவனத் தலைவர், ஏற்றுமதியாளர் சங்கம்:அரசு சாரா பொதுநல அமைப்புகள், தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளதால், தொழில்முறை பங்களிப்போர் கூட்டமைப்பு வாயிலாக, பின்னலாடைத் தொழிலுக்கு எதிராக, வெளிநாடுகளில் பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். திருப்பூரில் மட்டும் தான், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் பின்பற்றப்படுகிறது. வளர்ந்த நாடுகளை சேர்ந்தவர்களும், பிரமிப்பாக பார்த்து, விசாரித்து செல்கின்றனர். தினமும், 10 கோடி லிட்டர் தண்ணீர் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது.காற்றாலை, சோலார் வாயிலாக, ஒட்டுமொத்த திருப்பூரின் தேவையை காட்டிலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.மறுசுழற்சி தொழில்நுட்பத்தால், பனியன் வேஸ்ட் கழிவு, பெட் பாட்டில் போன்ற கழிவுகளில் இருந்து ஆடை தயாரிக்கப்படுகிறது. மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பிலும் திருப்பூர் முன்னோடியாக இருக்கிறது. பல்வேறு பிரச்னைகளால், ஓராண்டாக பின்னலாடைத் தொழிலில் சுணக்கம் இருந்தது; கடந்த நான்கு மாதங்களாக முன்னேற்றம் கிடைத்துள்ளது; ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரித்துள்ளது. திருப்பூருக்குள்ள ஒரே பிரச்னை தொழிலாளர் பற்றாக்குறை மட்டுமே. நாளையே ஒரு லட்சம் பேர் வந்தாலும், உடனுக்குடன் வேலை கொடுக்க, திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. திருப்பூர் பெற்றுள்ள வெற்றி, ஏற்றுமதியாளருக்கு மட்டுமல்ல; தொழிலாளர், பொதுநல அமைப்பினர், அரசு பிரதிநிதிகளுக்கும் சொந்தமானது;பெண்கள் உயர வேண்டும்பிரதாப், திட்ட இயக்குனர், தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம்: நாட்டிலேயே, தமிழகத்தில் தான் பெண்கள் அதிக வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தொழிலாளராக மட்டுமல்ல; தொழில் முனைவோர்களாகவும் பெண்கள் உயர வேண்டும். நிறுவனங்களை நிர்வகிக்கும் அதிகாரிகளாக மாற வேண்டும். அதற்காகவே, தமிழக அரசு, 'தமிழ்நாடு - வீசேப்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது.பள்ளி, கல்லுாரி அளவில், திறன் மேம்பாட்டு பயிற்சி இல்லாததால், படிப்பை முடித்தவர் அதிகமாக இருந்தாலும், தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது. கல்வி நிலையிலேயே, தொழிலாளர் திறன் பயிற்சி, தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கும்பட்சத்தில், சமநிலையை பராமரிக்க முடியும்.பெண் தொழிலாளருக்கு பாதுகாப்பு மிக முக்கியமானது. பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில், உழைக்கும் தொழிலாளர் அதிகமாக இருந்த காலகட்டத்தில் வளர்ந்த நாடாக மாறியது. அதேபோல், இந்தியாவிலும் உழைக்கும் தொழிலாளர் அதிகம் இருப்பதால், விரைவில் வளர்ந்த நாடாக உயரும்.