உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஆடை உற்பத்தியில் அதிகரிக்கும் போட்டி; தொழில் பாதுகாப்புக்கு சிறப்பு திட்டம்  அவசியம்

 ஆடை உற்பத்தியில் அதிகரிக்கும் போட்டி; தொழில் பாதுகாப்புக்கு சிறப்பு திட்டம்  அவசியம்

திருப்பூர்: உள்நாட்டு உற்பத்தியிலும், வடமாநிலங்கள் போட்டியாக மாறியுள்ளதால், தமிழக அரசு, பின்னலாடை தொழிலை பாதுகாக்க, சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர். திருப்பூர் பின்னலாடை தொழில், பல்வேறு மாநில மக்களும், தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களுக்கும், பல்வேறு மாநில மக்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும் மாறியுள்ளது. பின்னலாடை தொழில், பலகட்ட தாக்குதலால் நெருக்கடியான சூழலில் தள்ளப்பட்டுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, ம.பி. போன்ற மாநிலங்களில், ஜவுளித்தொழில் துவங்க அதிகளவில் சலுகை வழங்கி அழைக்கின்றனர். 'நிட்டிங்', டையிங், பிரின்டிங் மற்றும் பின்னலாடை தயாரிப்பு நிறுவனங்கள் அமைக்க, ஊக்கம் அளிக்கும் வகையில், சலுகைகள் தாராளமாக வழங்கப்படுகிறது. மின்சார மானியம், முதலீட்டு மானியமும் வழங்கப்படுகிறது. இதனால், ஏற்றுமதி வர்த்தகத்திலும் சரி, உள்நாட்டு சந்தையிலும், வடமாநிலங்களுடன் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வடமாநிலத்தில் உற்பத்தியாகும் ஆடை விலைக்கும், திருப்பூரில் உற்பத்தியாகும் ஆடை விலைக்கும், 10 முதல் 20 சதவீத வேறுபாடு உள்ளது. மாநில அரசுகள் வழங்கும் சலுகையை பயன்படுத்தி, ஆடை விலையை குறைவாக வழங்கி வருகின்றனர். அவர்களுடன் போட்டியிட்டு, ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் விற்பனை செய்வது கடினமாக உள்ளது. சலுகைகள் வழங்காவிட்டாலும் பரவாயில்லை. தமிழக அரசு, புதிய வரி உயர்வு, மின் கட்டண உயர்வுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென, தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பின்னலாடை உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது: வடமாநில அரசுகள் பல்வேறு சலுகை வழங்குவதால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களால் போட்டியை சமாளிக்க முடியவில்லை. தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி, திருப்பூர் பின்னலாடை தொழிலை பாதுகாக்க வேண்டும். குறிப்பாக, மின்சார கட்டண உயர்வுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வரி உயர்வுகளையும் கட்டுப்படுத்த வேண்டும். குறு, சிறு தொழில்கள் அதிகம் இயங்குவதால், அத்தகைய தொழில்களை பாதுகாக்கும் வகையிலும், உற்பத்தி செலவுகளை கட்டுக்குள் வைக்கும் விதமாகவும், சிறப்பு சலுகை திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மத்திய அரசு, புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. செயல்பாட்டுக்கு வந்த பின், ஏற்றுமதியாளர்களின் பிரச்னைகள் குறையும். உள்நாட்டு விற்பனைக்கான ஆடை உற்பத்தியாளர் எதிர்கொள்ளும் சவால்களுக்கு, தமிழக அரசு சலுகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி