அதிகரிக்கும் வாகனங்கள்; தாங்குமா மாநகரம்?
திட்டமிடப்படாத கட்டமைப்புடன் உருவாகியுள்ள திருப்பூரில், மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சாலை கட்டமைப்பை விரிவுபடுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வாகனப்பதிவில் தமிழகம் 3ம் இடம்
கடந்த, 2023 - 2024ல், வாகன பதிவில் இந்திய அளவில், தமிழகம் மூன்றாமிடத்தில் இருப்பதாக, புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தொழில் நகரான திருப்பூரில், வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரிக்கிறது.தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், 2023ம் ஆண்டில், 12,137 டூவீலர் பதிவு செய்யப்பட்டன. 2024ல், 13,592 டூவீலர், 403 மொபட் என, 13,995 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், 1,858 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், 2023ல், 15,658 புதிய டூவீலர் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2024ல், இது, 17,048 ஆக உயர்ந்துள்ளது; முந்தைய ஆண்டை விட, இது, 1,390 அதிகம். ஆண்டுதோறும், மொத்த வாகனப்பதிவில், 10 முதல், 15 சதவீதம் வரை டூவீலர் பதிவு அதிகரித்திருக்கிறது. திருப்பூரில் டூவீலர் எக்கச்சக்கம்
பிற வாகனங்களை விட திருப்பூரில் டூவீலர் அதிகம். அதற்கு காரணம். நகரம் மட்டுமின்றி, அவிநாசி, பூண்டி, பல்லடம், பொங்கலுார், வெள்ளகோவில் உள்ளிட்ட ஊரகப்பகுதிகளில் இருந்து வேலை நிமித்தமாக திருப்பூருக்கு தினசரி வந்து செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகம். அதே நேரம் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.திருப்பூர் மாநகர பகுதியில் உள்ள ரோடு உட்பட அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பிரதான ரோடுகளில் வாகன போக்கு வரத்து என்பது, கணிசமாக அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. 'இதே நிலை நீடித்தால் திருப்பூர் தாங்காது' என்கின்றனர் போக்குவரத்து போலீசார்.'நகருக்குள், வாகனங்களின் வேக வரம்பு, 30 - 40 கி.மீ., மட்டுமே; ஆனால், டூவீலர் ஓட்டிகள் இதை பின்பற்றுவதில்லை. ஒரு வழிப்பாதையில் முன்னேறி செல்வது, வழியில்லை என தெரிந்தும் இடதுபுறம் முன்னேறி செல்வது, குறுகலான சாலையிலும் வலதுபுறம் முன்னேறிச் செல்வது என டூவீலர் ஓட்டிகள் தான் சாலை விதிகளை அதிகளவில் மீறுகின்றனர்; இதனால், விபத்துகளையும் எதிர்கொள்கின்றனர்' என்கின்றனர், போலீசார். - நமது நிருபர் -