ஒன்றிய அலுவலக கட்டடம் அகற்றும் பணிகள் தீவிரம்
உடுமலை; உடுமலை ஒன்றிய அலுவலக பழைய கட்டடத்தை, அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.உடுமலை ஒன்றிய நிர்வாக அலுவலக கட்டடம் தளி ரோடு எஸ்.என்.ஆர். நகர் அருகில் அமைந்துள்ளது. கட்டடம் 60 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையிலும், போதிய இடவசதி இல்லாததால், புதிய கட்டடம் கட்டுவதற்கு, பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டது.இந்நிலையில், நடப்பாண்டில் அரசின் சார்பில் பழைய கட்டடத்தை அப்புறப்படுத்தி புதிய கட்டடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.புதிதாக கட்டடம் கட்டி நிறைவு செய்யப்பட்டு, செயல்படும் வரை ஒன்றிய நிர்வாக அலுவலகம், நகராட்சி நிர்வாக அலுவலகத்தின் பழைய கட்டடத்தில் செயல்படுகிறது.புதிய ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கு, 5 கோடியே 90 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பழைய அலுவலகத்தை அப்புறப்படுத்துவதற்கு, 5 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழைய கட்டடத்தை அப்புறப்படுத்தும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.ஒன்றிய அலுவலர்கள் கூறியதாவது:ஒரு மாதத்திற்குள், பழைய கட்டடம் முழுவதுமாக அப்புறப்படுத்துவதற்கு, கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.மேலும், ஒன்றிய அலுவலக கட்டடத்திற்கு அருகிலுள்ள வேளாண் துறைக்குட்பட்ட பழைய கட்டடத்தையும் அப்புறப்படுத்தி, புதிதாக கட்டுவதற்கு அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினர்.