உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அடுத்த கட்ட வளர்ச்சி நோக்கி பயணம்; கலாம் கனவுகள்... நனவாக்கும் தொழில்முனைவோர்

அடுத்த கட்ட வளர்ச்சி நோக்கி பயணம்; கலாம் கனவுகள்... நனவாக்கும் தொழில்முனைவோர்

திருப்பூர்: 'இளைஞர்கள் வேலை தேடுபவராக இருக்கக்கூடாது; வேலை கொடுப்பவராக இருக்க வேண்டும்' என்றார், மக்கள் ஜனாதிபதியாக திகழ்ந்த அப்துல் கலாம். அவரது நினைவு நாளான நேற்று திருப்பூரில் தொழில்முனைவோர் பலரும், அவரை நினைவுகூர்ந்தனர். 'உற்பத்தி துறைதான் இந்தியாவின் வருங்காலம்' என்பது, கலாமின் அறைகூவல்; உற்பத்தி துறையை ஊக்குவிக்கும் வகையில், கட்டமைப்புகள் வலுவாக இருக்க வேண்டும் என அவர் விரும்பினார். அதன் அடிப்படையிலேயே, மத்திய அரசு, 'மேக் இன் இந்தியா' திட்டத்தை வடிவமைத்திருக்கிறது. கலாம் கண்ட இந்தியாவை உருவாக்கும் முயற்சிக்கு திருப்பூர்தான் முன்னுதாரணம்; இங்கு பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், அதிகபட்ச வேலை வாய்ப்பு அளிக்கும் தொழிலாகவும், அன்னிய செலாவணியை ஈட்டும் நகரமாகவும் உயர்ந்துள்ளதாக, இளம் தொழில்முனைவோர்களும், தொழில்துறையினரும் பெருமையுடன் கூறுகின்றனர்.

மாசில்லா சுற்றுச்சூழல் உற்பத்தியில் உன்னதம்

'சுற்றுச்சூழல் ஒரு தடையாக இல்லை; அது நமக்கு நண்பன்' என்று கலாம் கூறியுள்ளார். அதன்படியே, உற்பத்தியில், 'ஜீரோ வேஸ்ட்' என்ற நிலையை நோக்கி திருப்பூர் நகர்ந்து கொண்டிருக்கிறது. 'கனவு காணுங்கள்.. கனவுகள் சிந்தனைகளை உருவாக்கும்… சிந்தனைகள் செயலாக்கமாக மாறும்' என்ற அவரது வாக்கிற்கு ஏற்ப, பொறுப்பு மிகுந்த வளம் குன்றா வளர்ச்சி நகரமாக திருப்பூர் முன்னேறியுள்ளது. கலாம் விரும்பியபடி, இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி பரவலாக்கப்பட வேண்டும். - ஸ்ரீதரன், மாவட்ட தலைவர், லகு உத்யோக் பாரதி.

சிந்தித்து செயலாற்றினால் தொழிலில் வெற்றி உறுதி

பிரின்டிங் தொழிலில், ஆட்கள் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது; அதற்கு ஏற்ப, புதிய மெஷின்களை உருவாக்கலாம் என்று திட்டமிட்டோம். அதற்காக, அனைவருக்கும் ஏற்ற வகையிலான தொழில்நுட்பம் கண்டறியப்பட வேண்டும். வெளிநாடுகளில், 30 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கும் 'ரோபோ' தொழில்நுட்பத்தை, கோவையில் மிகக்குறைந்த கட்டணத்தில் உருவாக்கி, சோதனை முறையில் சரிபார்த்துள்ளோம். இதன்மூலம் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கலாம். கலாம் கூறிய பொன்மொழிகள், ஒவ்வொரு இளைஞர்களுக்கு வரம் அளிக்கும் மந்திரங்களை போன்றது; ஆழ்ந்து சிந்தித்து செயலாற்றினால் வெற்றி கிடைக்கும். - நவநீத், நிர்வாக இயக்குனர், பிரின்டிங் நிறுவனம், திருப்பூர்.

திருப்பூரின் திறனை காட்ட ஜெர்மனியில் கண்காட்சி

தமிழக ஜவுளித்துறை அமைச்சகத்தின் முழு ஈடுபாட்டுடன், ஜெர்மனியில் மிகப்பெரிய ஜவுளி கண்காட்சி நடக்கிறது. உற்பத்தி தொழில்கள் மேம்பட, மார்க்கெட்டிங் சிறப்பாக இருக்க வேண்டும். அதற்காகவே, வெளிநாடுகளில் கண்காட்சிகள் நடத்தி வருகிறோம். திருப்பூரில் உற்பத்தியாகும் பொருட்களை, வெளிநாட்டு வர்த்தகர் மற்றும் மக்களுக்கு காட்சிப்படுத்தி, ஏற்றுமதியை மேம்படுத்துவதே எங்கள் குறிக்கோள். இதுவரை திருப்பூரில் மட்டும் கண்காட்சி நடத்தி வந்த நிலையில் இருந்து, திருப்பூரின் உற்பத்தியை உயர்த்திக்காட்ட வெளிநாடுகளில் கண்காட்சி நடத்தும் முயற்சியை துவக்கியிருக்கிறோம். - சிபி சக்ரவர்த்தி, இயக்குனர், 'டெக்ஸ்போ குளோபல் புராஜக்ட்' நிறுவனம்.

லட்சக்கணக்கானோருக்கு வேலை தரும் 'டாலர் சிட்டி'

உலக அளவில் உற்பத்தியில் முன்னோடியாக இருப்பது சீனா. உலக அளவில் 'நம்பர் 1' என்ற அந்தஸ்தில் உள்ளது. அமெரிக்க அதிபரும், அமெரிக்க உற்பத்தியை முன்னிலைப்படுத்த அதிரடியாக இயங்கி வருகிறார். இந்தியா, மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக முன்னேறுவதற்கு, உற்பத்தி தொழிலே முக்கிய காரணமாக அமையும். திருப்பூர், உள்நாடு மற்றும் ஏற்றுமதி என, ஒரே நேரத்தில் தொழில் செய்வது சாதனை. லட்சக்கணக்கான வேலை வாய்ப்பு வழங்கி வருகிறோம், உற்பத்தி பிரிவு மேம்பட வேண்டுமெனில், குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை, 'அப்டேட்' ஆக வேண்டும். கலாம் கூறியபடி, அடுத்தகட்ட வளர்ச்சிக்காக, கனவு காண வேண்டும்; அதை நனவாக்கவும் வேண்டும். - விஷ்ணு பிரபு, ஏற்றுமதியாளர், திருப்பூர்.

முதலில் சிறிய இலக்குடன் அடையலாம் பெரிய இலக்கு

உற்பத்தி துறையால் மட்டுமே, தொழில் வளர்ச்சி கிடைக்கும்; அதற்கு, தொழிலாளர் திற்ன் மேம்பாடு மிகவும் அவசியம். தொழிலாளர்களுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்படும். உற்பத்தியை மேம்படுத்த, சரியான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். கலாம் கனவு கண்டபடிதான், இந்தியா வல்லரசாகும் நிலையை அடைந்துவிட்டது. தொழில்துறையினர், முதலில், சிறிய இலக்கையும், பிறகு பெரிய இலக்கையும் நிர்ணயித்து, அதை நோக்கியே, விடாமுயற்சியுடன் பயணிக்க வேண்டும். இந்தியாவின் உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக, திருப்பூர் முன்னேறியிருக்கிறது. - சிவசுப்பிரமணியம், தலைவர், உறுப்பினர் சேர்க்கை துணைக்குழு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்.

அப்துல் கலாம் கனவுகளை நனவாக மாற்றியிருக்கிறோம்

'நாம் சுயமாக உற்பத்தி செய்ய வில்லை என்றால், நாம் சுதந்திரமாக இருக்க முடியாது' என்று கலாம் கூறிய வார்த்தையில், மிகப்பெரிய உண்மை இருக்கிறது. நாட்டின் வளர்ச்சி சிந்தனையில் மட்டுமல்ல... அதன்வழியே செல்லும் உற்பத்தி தொழிலில்தான் இருக்கிறது.இந்தியா போன்ற இளைஞர் அதிகம் உள்ள நாடு முன்னேற்றம் அடைய, மாவட்டம் தோறும், மாறுபட்ட உற்பத்திக்கான மையங்களாக மாறியிருக்க வேண்டும். காலத்துக்கு ஏற்ற மாற்றத்துடன், உற்பத்தி தொழில் நகர்வதே சரியான வளர்ச்சியாக இருக்கும். கலாமின், 'புரா' எனப்படும், 'கிராமம் முதல் நகரம்' வரையில் சீரான தொழில் வளர்ச்சி என்ற வழிகாட்டி திட்டம், அதற்கு எழுச்சி நிறைந்த வழிகாட்டுதலாக அமைந்தது.''இந்திய இளைஞர்கள் வேலை தேடுபவராக இருக்கக்கூடாது; வேலை கொடுப்பவராக இருக்க வேண்டும்'' என்பதே கலாமின் கனவு. அதை பெரும்பாலும் நனவாக மாற்றிவிட்டோம்.- ஜெய்பிரகாஷ்,'ஸ்டார்ட் அப் இந்தியா' வழிகாட்டி ஆலோசகர், திருப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை