நீதிபதிகளே... மனம் இரங்குங்கள் பட்டா கேட்டு பொதுமக்கள் உருக்கம்
பல்லடம்; ''ஜீவனத்துக்காக நாங்கள் மடிப்பிச்சை கேட்கிறோம். நீதிபதிகளே, தயவுசெய்து மனம் இரங்குங்கள்'' என, பல்லடம் அருகே, பட்டா கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்தனர். பல்லடம் அடுத்த, அறிவொளி நகர்பகுதியை சேர்ந்த, 1008 குடும்பங்கள் பட்டா கேட்டு சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், இதே பகுதியில் வசிக்கும், 547 குடும்பத்தினர், நேற்று, பட்டா கேட்டு அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறியதாவது: பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த நாங்கள், மாவட்ட நிர்வாகம் மூலம், அறிவொளி நகரில் குடியமர்த்தப்பட்டோம். இங்குள்ள, அம்பேத்கர் நகர், ரத்தினசாமி நகர், ஜெ.ஜெ., நகர் மற்றும் நரிக்குறவர் காலனி பகுதிகளில், மொத்தம், 547 குடும்பத்தினர், கடந்த, 32 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம். வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என, அனைத்தும் செலுத்தி வருகிறோம். இன்று வரை பட்டா இல்லை. ஓட்டு அரசியல் ஒவ்வொரு தேர்தலின் போதும் ஓட்டுக்காக எங்களை வைத்து அரசியல் செய்தவர்கள், எங்களை ஏமாற்றி வருகின்றனர். இத்தனை ஆண்டு காலம் இங்கு வசித்தபடி, எங்களது உழைப்பு, வருமானம் அனைத்தையும் பயன்படுத்தி வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம். எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் அச்சமாக உள்ளது. இந்த இடத்தின் மீது கோர்ட்டில் வழக்கு நடப்பதாக கூறப்படுகிறது. எனவே, சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் நீதிபதிகளுக்கு நாங்கள் வேண்டுகோள் வைக்கிறோம். நீதிபதிகளே, தயவு செய்து எங்களின் ஜீவனத்துக்காக மனம் இரங்குங்கள். 1.25 சென்ட் இடத்துக்காக மடிப்பிச்சை கேட்கிறோம். எங்களின் ஒரே ஒரு கோரிக்கையான, பட்டா கிடைக்க உதவுங்கள். இவ்வாறு அவர்கள் கூறினர். ஓட்டை வீடு... ஊரே தெரியும்''தமிழகம் முழுவதும் தொகுப்பு வீடு கட்டிக் கொடுப்பதாக கூறப்படுகிறது. எங்களையெல்லாம் யாருக்கும் தெரியவில்லையா? ஓட்டை வீட்டில் இருந்து பார்த்தால் ஊரே தெரியும் வகையில் தான் வாழ்ந்து வருகிறோம். நரிக்குறவர் குடும்பம் என்றால் நாங்கள் இப்படியேதான் இருக்க வேண்டுமா? தினசரி வேலைக்குச் சென்றால்தான் எங்களுக்கு சோறு. எங்களது வாக்காளர் அட்டை, ஆதார் உள்ளிட்டவற்றை அரசே வைத்துக் கொள் ளட்டும். இன்னும் ஒரு மாதத்தில் எங்களுக்கு பட்டா கிடைக்கவில்லை எனில், வரும் தேர்தலில் நாங்கள் யாருமே ஓட்டு போட மாட்டோம். இதுபோன்ற போராட்டம் அடுத்தது கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும்'' என, நரிக்குறவர் குடும்பத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர் ஆவேசத்துடன் கூறினார்.