கலையரசன், கலையரசி விருது; தயாராகும் மாணவ, மாணவியர்
திருப்பூர் ; விரைவில், மாவட்ட கலைத்திருவிழாவும், அதைத் தொடர்ந்து மாநில கலைத்திருவிழா போட்டிகளும் நடக்கவுள்ளதால், திறமை காட்ட மாணவ, மாணவியர் இப்போதிருந்தே தயாராக வேண்டியுள்ளது.பள்ளி கல்வித்துறை சார்பில் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியரின் தனித்திறனை வெளிக்கொணர, கலைத்திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. இதில், தனிநபர், குழு நடனம் துவங்கி, பாடல் ஒப்புவித்தல், கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடப்போட்டி, பேச்சு மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல், மெல்லிசை, களிமண் பொம்மை செய்தல், நாட்டுப்புற கலை சார்ந்த நடனம் உள்ளிட்ட, 27 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது.நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி அளவிலான கலைத்திருவிழா, அக்., மூன்றாவது வாரம் நடத்தி முடிக்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பிடம் பெற்ற மாணவியர் தற்போது, வட்டார அளவில் நடந்து வரும் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்று வருகின்றனர். நடப்பு வாரம் இப்போட்டிகள் முடிந்த பின், நவ., 11 முதல், 20ம் தேதி வரை, மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி நடத்தப்பட உள்ளது.கலையரசன், கலையரசி யார்?இப்போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறுவோருக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தப்படுகிறது. மாநில போட்டியில் பங்கேற்று, வெற்றி பெறுவோருக்கு கலையரசன், கலையரசி விருது மற்றும் சான்றிதழ் தமிழக அரசின் மூலம் வழங்கப்படுகிறது. விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து சாதித்து வரும் திருப்பூர், கலைத்திருவிழா போட்டிகளில் கலக்க வேண்டும்.
மாணவர்களிடம் தேவை தன்னெழுச்சி
அடையாளம் காண்பது ஆசிரியர் பணி------பெரும்பாலான மாணவ, மாணவியர் பள்ளிக்கு வந்து பயிற்சி வழங்கினால் மட்டுமே போட்டியில் பங்கேற்கின்றனர். பெற்றோர் ஊக்குவிப்பு, தன்னெழுச்சியாக தானே போட்டிக்கு தயாராகி மேடையில் திறமை காட்டுபவராக சிலரே உள்ளனர். இதனால், குறிப்பிட்ட சில போட்டியாளர் இல்லாத நிலை கூட மாவட்ட போட்டிகளில் ஏற்படுகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் எத்தகைய திறமை உள்ளது, எந்த போட்டிக்கு தேர்வுக்கு செய்தால், ஆர்வமுடன் மாணவர், மாணவி செயல்படுவார் என்பது கட்டாயம் வகுப்பாசிரியர் அல்லது அந்த வகுப்புக்கு சென்று வரும் ஒரு ஆசிரியருக்காவது தெரிந்திருக்கும். அரசு பள்ளிகளுக்கு மட்டுமே இந்த கலைத்திருவிழா வாய்ப்பு வழங்கப்படுவதால், ஒவ்வொரு பள்ளியிலும் தவறாது பங்கேற்றால், நடப்பு ஆண்டில் இல்லாவிட்டாலும், அடுத்த ஆண்டிலாவது சொற்ப வெற்றியையாவது பெற முடியும். ஊக்குவிப்பு, பயிற்சியும், அதற்கான முயற்சியும் இருந்தால், வெற்றி சாத்தியம் தான். மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு அரசின் 'மெரிட்' சான்றிதழ் கிடைப்பதால், படிப்பு முடித்த பின் அது வேலை வாய்ப்புக்கு உதவும். எனவே, மாணவர்கள் வட்டார, மாவட்ட கலைத்திருவிழாவில் திறமை காட்ட கடும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஆர்வமுள்ள தலைமை ஆசிரியர்களும், அதற்கு தக்க ஊக்கம் அளிக்க வேண்டும்.- கல்வித்துறை அதிகாரிகள்