உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மண்ணெண்ணெய் கிடைக்காமல் தவிப்பு; மலைகிராம மக்கள் வேதனை 

மண்ணெண்ணெய் கிடைக்காமல் தவிப்பு; மலைகிராம மக்கள் வேதனை 

உடுமலை : மலைவாழ் கிராமங்களுக்கு, கூடுதலாக மண்ணெண்ணெய் வினியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கை, கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், குழிப்பட்டி, குருமலை, மாவடப்பு, பூச்சிக்கொட்டாம்பாறை, தளிஞ்சி, கோடந்துார் ஆட்டுமலை உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் உள்ளன.இதே போல், திருமூர்த்திமலை அடிவாரத்திலும், அமராவதி அணை அருகே கரட்டுப்பதியிலும் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.இக்கிராமங்களில், மின்வசதி இல்லாததால், சோலார் விளக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான சோலார் பேனல்கள் பழுதடைந்துள்ளதால், இரவு நேரங்களில், இருளில் தவிக்கும் நிலை அப்பகுதி மக்களுக்கு உள்ளது.அடர் வனப்பகுதியிலுள்ள கிராமத்தில், வனவிலங்குகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. மேலும், உணவு தயாரித்தல், விளக்கு எரிக்கவும், மண்ணெண்ணெய் அப்பகுதி மக்களுக்கு முக்கிய தேவையாக உள்ளது.தற்போது, மலை கிராமங்களுக்கு நடமாடும் ரேஷன் கடை திட்டம் வாயிலாக, ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது. இத்திட்டத்தில், குறைந்தளவே மண்ணெண்ணெய் வினியோகிக்கப்படுகிறது.பாதிக்கப்பட்ட மக்கள், நீண்ட காலமாக ஒரு ரேஷன் கார்டுக்கு, 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.வடகிழக்கு பருவமழை காலத்தில், அனைத்து கிராம மக்களுக்கும் மண்ணெண்ணெய் கூடுதலாக தேவைப்படும். பருவமழை சீசன் துவங்க உள்ள நிலையில், நீண்ட கால கோரிக்கை குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ