ச ட்டப் புத்தகங்களில் மட்டுமல்ல; மனித வாழ்க்கைக்கு அடித்தளமாக உள்ள இலக்கியத்திலும் தங்களுக்கு நாட்டமும், ஆர்வமும் உள்ளது என்பதை திருப்பூர் வக்கீல்கள் வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது புதிதாக வழக்கறிஞர்கள் இலக்கிய வட்டம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வக்கீல் சுப்புராஜ் நம்மிடம் பகிர்ந்தவை: யுவர் ஹானர்... புதிய சட்ட விதிகள் பிரிவு என செக் ஷன்களையும் அதன் சப் செக் ஷன்களையும் குறிப்பிட்டு நீதிபதிகள் முன் வழக்குகளில் ஆஜராகியும், அதன் விளக்கங்களை, விவரங்களை வழக்குதாரர்களிடம் பகிர்வதும் என வக்கீல்கள் வாழ்க்கை இயந்திரகதியாக நகர்கிறது. இதை தங்கள் உழைப்பாக, தொழிலாக, பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய நீதி பெற்றுத்தர கிடைத்த வாய்ப்பாக பலரும் எண்ணி பணி செய்கிறோம். அவ்வகையில் பணியாற்றும் வக்கீல்களுக்கு ஒரு மாறுதல் கட்டாயம் தேவை. அது ஏன் ஒரு இலக்கியம் சார்ந்த தேடலாக இருக்கக்கூடாது என்ற எண்ணம் எங்களிடம் தோன்றியது. அதனடிப்படையில் தான் திருப்பூர் கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்கள் இலக்கிய வட்டம் என்ற அமைப்பை துவங்கியுள்ளோம். வக்கீல்கள் மத்தியில், இலக்கிய உணர்வை மேம்படுத்துவது முதல் நோக்கம். மேலும், ஜாதி, சமய, இன, மொழி, போன்ற பல்வேறு வேறுபாடுகளைக் கடந்து, மனித நேயம் உருவாக்குவது, அதைப் போற்றுவது, பாதுகாப்பது ஆகியவற்றுக்கு இந்த அமைப்பு பெரும் உதவியாக அமையும். மனித நேய சிந்தனை கொண்டோரை கண்டறிந்து, இலக்கியத்தில் அவர்கள் இனம் கண்டு, வெளியுலகுக்கு அறிமுகப்படுத்துவதும் முக்கிய நோக்கம். வக்கீல்கள் பூமதி, நாராயணசாமி, உதயசூரியன், அருண் கிருஷ்ணன், அமர்நாத், தமிழ் கார்க்கி ஆகியோர் இடம் பெற்றுள்ள குழு செயல்படுகிறது. மாதம் தோறும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியவில் இதன் அமர்வு நடைபெறும். இதற்கான உறுப்பினர் சேர்க்கை, நிர்வாக குழு ேதர்வு செய்யப்படும். அதைத் தொடர்ந்து அமைப்பின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலான நடவடிக்கை தொடரும்.