உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மொபைல் போன் டவர்: மக்கள் எதிர்ப்பு

 மொபைல் போன் டவர்: மக்கள் எதிர்ப்பு

திருப்பூர்: பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். நொச்சிபாளையம் பிரிவு, மூலக்கடை பகுதி மக்கள்: குடியிருப்பு பகுதியில், அமைக்கப்பட்ட மொபைல்போன் டவரில் கடந்த, 5ம் தேதி, மாலை, 5:30 மணியளவில் டவரின் மின் இணைப்பு வழங்கும் அறையில், அலுவலர்கள் பணி செய்துகொண்டிருந்தபோது, பயங்கர சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. டவரை அப்புறப்படுத்த வேண்டும். எஸ்.ஆர். நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர்: மாநகராட்சி 38வது வார்டு, எஸ்.ஆர்., நகர் வடக்கு பகுதியில், குமரன் மெயின் வீதியிலுள்ள காலி மனையில், தனியார் மொபைல் போன் டவர் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். விதிமுறை மீறி டவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. டவர் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது. நத்தக்காடையூர் செங்குந்த மகாஜன சங்கத்தினர்: காங்கயம் தாலுகா, நத்தக்காடையூரில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், மாரியம்மன் கோவில் உள்ளது. பொங்கல் விழாவில், கம்பம் எடுத்து வருவது தொடர்பாக, தாசில்தார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. அதன் மேல் நடவடிக்கையாக, கோவில் பகுதியில் கூட்டம் கூடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஒருதரப்பினர், கோவில் அருகே திரண்டு, ஒலி பெருக்கி வைத்து, மற்றொரு தரப்பு மக்களை மிரட்டுகின்றனர். ஊர் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும். மங்கலம் ஊராட்சி, இந்தியன் நகர் மக்கள்: இந்தியன் நகரில், 350 குடும்பத்தினர், 30 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இதனருகே, அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. டிஜிட்டல் சர்வே செய்து, கம்பிவேலி அமைத்துள்ளனர். பொதுமக்கள் பயன்பாட்டிலுள்ள வழித்தடத்தில், 8 அடியை ஆக்கிரமித்துள்ளனர்; 30 அடி வழித்தடத்தில் தற்போது, 22 அடி மட்டுமே உள்ளது. 30 அடி வழித்தடத்தை மீட்டுத்தரவேண்டும். தட்டான்குட்டை பகுதி மக்கள்: ஈட்டிவீரம்பாளையம், தட்டான் குட்டை பகுதி குடும்பத்தினருக்கு, ஆன்லைன் பட்டாவில் பெயர் மாற்றப்படாமல், அரசு புறம்போக்கு நிலமாகவே உள்ளது. பட்டாவை எங்கள் பெயருக்கு மாற்றம் செய்து கொடுக்கவேண்டும். பொதுமக்களிடமிருந்து, 328 மனுக்கள் பெறப்பட்டு, பதிவு செய்யப்பட்டது .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி