| ADDED : மார் 08, 2024 02:06 AM
திருப்பூர்:குப்பைகளை பிரித்து வழங்கும் வகையில் பொதுமக்களிடம் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து வழங்கும் வகையில், தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் உரிய விழிப்புணர்வு இல்லாத நிலையில், பெரும்பாலானோர் இதை பின்பற்றாத நிலை காணப்படுகிறது.இதனால் துாய்மைப் பணியில் பெரும் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.இதற்கு தீர்வு காணும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.என் குப்பை; என் பொறுப்பு என்ற தலைப்பில் 49வது வார்டு, கே.என்.பி., சுப்ரமணியன் நகரில் இம்முகாம் நேற்று நடந்தது.மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார், நகர் நல அலுவலர் கவுரி சரவணன், உதவி கமிஷனர் வினோத், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். வீடு வீடாகச் சென்று இது குறித்து துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்தல் அதை முறையாக அகற்றுதல் ஆகியன குறித்து விளக்கப்பட்டது. மேலும் துாய்மைப் பணியாளர்களுக்கு தொப்பி, கையுறை, காலுறை ஆகியனவும் வழங்கப்பட்டது.மாநகராட்சியை குப்பையில்லாத நகராக மாற்றும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் குப்பைகள் தரம் பிரித்து வழங்குவதில் நிலவும் பிரச்னை, இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதில் பெரும் தடையாக உள்ளது.பொதுமக்கள் இதை உணர்ந்து முறையாக கையாள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.