| ADDED : நவ 19, 2025 04:42 AM
நல்லாறு அவலம்: எம்.பி. இன்று ஆய்வு: நல்லாற்றை மீட்டெடுக்கும் மக்களின் கோரிக்கைக்குதீர்வு காண முயற்சிப்பதாக, எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உறுதியளித்துள்ளனர். நல்லாறு பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள், நேற்று, திருப்பூர் எம்.பி., சுப்பராயன் மற்றும் வடக்கு எம்.எல்.ஏ., விஜயகுமார் ஆகியோரை நேரில் சந்தித்து, 'நல்லாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார் வாரி சுத்தம் செய்ய வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு வழங்கினர். நல்லாறு பாதுகாப்பு இயக்கத்தினர் கூறியதாவது: அவிநாசி, பூண்டி, திருப்பூர் நகரின் எதிர்கால நலன் கருதி நல்லாற்றை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் அவசியமாகியிருக்கிறது; நல்லாற்றை மீட்டெடுப்பது தொடர்பான எங்கள் கோரிக்கையை ஏற்ற எம்.பி., சுப்பராயன், நாளை (இன்று), காலை, 8:30 மணிக்கு நல்லாற்றை பார்வையிட உள்ளதாக உறுதியளித்துள்ளார். அதே போன்று, வடக்கு எம்.எல்.ஏ., இந்த வார இறுதியில் நல்லாற்றை பார்வையிட வருவதாக உறுதியளித்துள்ளார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.