உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலுக்கு ரூ.1.10 கோடியில் திருத்தேர்

நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலுக்கு ரூ.1.10 கோடியில் திருத்தேர்

நல்லுாரில் உள்ள, ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், சோமாஸ்கந்த முகூர்த்த வடிவில், விஸ்வேஸ்வரர், விசாலாட்சி அம்மனுக்கு இடையே முருகர் சன்னதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. கோவில், மைசூர் சாம்ராஜ் உடையார் காலத்தில் கட்டப்பட்டுள்ளது; ஏராளமான கல்வெட்டுகளும் உள்ளன.கடந்த, 100 ஆண்டுகள் முன் வரை, கோவிலில் தேர்த்திருவிழா நடந்துள்ளதை, இங்குள்ள நான்கு ரத வீதிகளும் உறுதி செய்கின்றன. கோவில் திருப்பணி முடிந்து கும்பாபிேஷகமும் நடந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை நியமித்துள்ள அறங்காவலர் குழு, நுாறு ஆண்டுகள் முன்பு இருந்தது போல், தேர் செய்து தேர்த்திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளது.சேலம், தம்பம்பட்டியை சேர்ந்த ஸ்தபதி ரவி குழுவினர், மரத்தேர் வடிவமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தரமான இலுப்பை மரத்தில், நேர்த்தியான சுவாமி சிற்பங்களுடன் தேர் வடிவமைக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது. தேரின், 2வது நிலை நேற்று நிறைவடைந்து, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.அறங்காவலர் குழு தலைவர் முருகேசன், பிரியா கனகராஜ், சிவக்குமார், ஜெகதீஷ், அன்னபூரணி, ஸ்ரீபுரம் அறக்கட்டளை தலைவர் ஜெயசித்ரா சண்முகம், முன்னாள் கவுன்சிலர் கோபால்சாமி, செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) செந்தில் ஆகியோர் பங்கேற்றனர்.நல்லுார், விஜயாபுரம், பள்ளகாட்டுப்புதுார், அத்திமரத்துப்புதுார், மாணிக்காபுரம், காசிபாளையம், கணபதிபாளையம், ராக்கியாபாளையம் கிராம மக்கள், தேர்த்திருவிழாவை கொண்டாட மகழ்ச்சியுடன் தயாராகி வருகின்றனர்.

சித்திரையில் வெள்ளோட்டம்

ஆனியில் தேரோட்டம்சுவாமி பீடத்துடன் சேர்த்து, 12 அடி உயரத்தில் தேர் பீடம் அமைக்கப்படுகிறது. சாரம் அமைத்து கலசம் பொருத்தும் போது, 27 அடி உயரத்தில் இருக்கும். சுவாமிமலையில், 48 கிலோ எடையில், பஞ்சலோக சோமாஸ்கந்தர் சிலை வடிவமைக்கப்பட்டு வருகிறது. அத்துடன், விசாலாட்சியம்மன் சிலை, பிச்சாண்டவர் சிலையும் வடிவமைக்கப்படுகிறது.தேர்த்திருவிழா நடத்தும் போது, 15 நாட்களுக்கு தினமும் சிறப்பு பூஜை, சுவாமி புறப்பாடு இருக்கும். அதற்காக, புதிதாக, 14 வகையான வாகனங்களும், விநாயகர் சிறிய தேரும் வடிவமைக்கப்பட உள்ளது. மொத்தம், 1.10 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான தேர் வடிவமைப்பு பணிகள், சித்திரை மாதம் நிறைவு பெற்று, வெள்ளோட்டம் நடத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும், ஆனி மாதம், தேர்த்திருவிழா விமரிசையாக நடத்தப்படும்.- முருகேசன், அறங்காவலர் குழு தலைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை