திருப்பூர்: தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டியில், வினாடி - வினா, பாட்டு எழுதும் போட்டியில் திருப்பூர் மாணவர்கள் மாநில அளவில் முதலிடமும்; சுவர் இதழ் ஓவிய போட்டியில் மூன்றாமிடம் பிடித்து சாதித்துள்ளனர்.தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு தேசிய வாக்காளர் தின போட்டிகள் நடத்தப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில், அரசு, தனியார் 35 பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றனர்.மாவட்ட அளவிலான போட்டியில் முதல் மூன்று இடம் பிடித்த படைப்புகள், மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தேசிய வாக்காளர் தினமான கடந்த, 25ம் தேதி, மாநில அளவிலான போட்டிகள், சென்னையில் நடைபெற்றன. இதில், திருப்பூர் மாணவ, மாணவியர் பங்கேற்று, முதலிடம் பிடித்து சாதித்துள்ளனர்.திருப்பூர், அம்மாபாளையம் ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சூரியபகவதி - வினாயக் ஸ்ரீராம் ஜோடி, மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். அதேபோல், பாட்டு எழுதி பாடும் போட்டியில், செயின்ட் ஜோசப் கல்லுாரி மாணவி வைஷ்ணவி முதலிடம்.சுவர் இதழ் ஓவியம் தயாரிக்கும்போட்டியில், திருப்பூர் கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி மாணவர் பிரதீப்சஞ்சை மூன்றாமிடம் பிடித்துள்ளார். மாநில அளவில் சாதித்த மாணவர்களுக்கு கவர்னர் ரவி, பரிசு தொகை, பரிசு கோப்பை மற்றும் பாராட்டு சான்று வழங்கி பாராட்டியுள்ளார்.