உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கால்நடைகளுக்கான நோய்த்தடுப்பு பணியில் அலட்சியம்! சிறப்பு முகாம்களை மறந்த பராமரிப்பு துறை

கால்நடைகளுக்கான நோய்த்தடுப்பு பணியில் அலட்சியம்! சிறப்பு முகாம்களை மறந்த பராமரிப்பு துறை

உடுமலை: பருவமழை சீசனில், கால்நடைகள் பல்வேறு நோய்த்தாக்குதலுக்கு ஆளாகி வரும் நிலையில், கால்நடைத்துறையினர், கிராமந்தோறும் சிறப்பு முகாம் நடத்தாமல் அலட்சியம் காட்டுவதால், பால் உற்பத்தி குறைவதுடன் கால்நடை வளர்ப்பும் சவாலாகி உள்ளது. உடுமலை சுற்றுப்பகுதிகளில், பால் உற்பத்திக்காக கறவை மாடுகள் அதிகளவு பராமரிக்கப்படுகின்றன. ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பால் விற்பனை செய்து வருகின்றனர். வெள்ளாடு, எருமை, செம்மறியாடு, எருதுகள் வளர்ப்பும் இப்பகுதிகளில் கணிசமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நாட்டு மாடு வளர்ப்பும் அதிகரித்துள்ளது. இவ்வாறு வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு பருவமழை காலத்தில் பரவும் நோய்களால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக பால் உற்பத்தி குறைவதுடன், ஒவ்வொரு சீசனிலும், 50க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. கால்நடைகள் உயிரிழப்பதால், பொருளாதார இழப்பை கால்நடை வளர்ப்போர் சந்திக்கின்றனர்; நோய்த்தாக்குதலுக்கான சிகிச்சைக்கு அதிகளவு செலவிட்டும் வருகின்றனர். பருவமழை காலத்தில், அதிக ஈரப்பதம் உள்ளிட்ட காரணங்களால், மாடுகளுக்கு மடிவீக்க நோய் ஏற்படுகிறது. தற்போது பரவலாக உடுமலை பகுதியிலுள்ள கால்நடைகளுக்கு, இத்தகைய நோய்த்தாக்குதல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கால்நடை வளர்ப்பில், பல்வேறு பாதிப்புகள் தொடர்கதையாக உள்ள நிலையில், கால்நடை பராமரிப்பு துறையினர் தரப்பில் எவ்வித உதவியும் கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. கால்நடை வளர்ப்போர் கூறியதாவது: கறவை மாடுகளில், கோமாரி, உண்ணிக்காய்ச்சல், மடிவீக்க நோய் மற்றும் அம்மை நோய் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பரவும் தன்மையுள்ள நோய்களால், ஒரே நேரத்தில் கிராமத்தில் நுாற்றுக்கணக்கான மாடுகள் பாதிக்கின்றன. இது குறித்து அருகிலுள்ள கால்நடை கிளை நிலையங்கள், மருந்தகங்களுக்கு தகவல் கொடுத்தாலும், சிகிச்சை மற்றும் நோய்த்தடுப்பு பணிகளில் அலட்சியமாக உள்ளனர். இதனால், சிகிச்சைக்கு தனியாரை மட்டுமே நம்பியுள்ளோம். ஒவ்வொரு முறையும் ஒரு மாட்டுக்கு சிகிச்சையளிக்க, 2 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. முன்பு ஒவ்வொரு சீசனிலும், மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு கால்நடைத்துறையால் வழங்கப்படும்; துண்டு பிரசுரங்கள் வினியோகித்து, ஒவ்வொரு ஊராட்சியிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இத்தகைய முகாம்கள் தற்போது நடைபெறுவதில்லை. முறையாக தகவல் தெரிவிக்காமல், பெயரளவுக்கு முகாம்களை நடத்துகின்றனர். விவசாயத்துக்கு அடுத்து, பிரதானமாக உள்ள கால்நடை வளர்ப்பில் நிலவும் பாதிப்புகள் குறித்து நேரடி ஆய்வு செய்து சிகிச்சையளிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உடுமலை கோட்ட கால்நடைத்துறையினர் முன்வர வேண்டும். இல்லாவிட்டால், பெரும்பாலானவர்கள் கால்நடை வளர்ப்பை கைவிடும் நிலை உருவாகும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை