நெகிழிக்கு மாற்றுப்பொருள் ஊக்குவிக்க புதிய இயக்கம்
'நெ கிழி' இல்லாத தமிழகத்தை உருவாக்கும் முயற்சியாக, பிளாஸ்டிக்கிற்கு மாற்றான பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் புதிய விழிப்புணர்வு இயக்கத்தை, மாசுக்கட்டுப்பாடு வாரியம் துவக்கியுள்ளது. தடைசெய்யப்பட்ட, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால், சுற்றுச்சூழல் பாதிக்கும் வகையில், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுடன் இணைந்து, ஆய்வு செய்து பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டுமென, அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட அளவில், கலெக்டர் தலைமையில் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரிகள், பல்கலை என்.சி.சி., - என்.எஸ்.எஸ்., இளைஞர் மன்றம், பசுமை மன்றங்கள், தன்னார்வ அமைப்புகள் இணைந்து, மக்கள் இயக்கமாக உருவாக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் வாயிலாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். அதுதொடர்பாக, மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட அளவில் ஒருங்கிணைத்து நடத்த, 'பசுமை தோழி' என்ற பணியிடமும் உருவாக்கப்பட்டுள்ளது. மஞ்சப்பை பயன்படுத்துங்கள்பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது, பெரும் சவாலாக உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்துவது குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே, மாவட்ட பணிக்குழுவின் நோக்கம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், மாற்றுப்பொருட்கள் பயன்பாட்டை மக்களிடையே ஊக்குவிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. பாலிதீனுக்குப் பதிலாக, மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும். ஓட்டல், பூக்கடை, இறைச்சி கடைகளில், வாழை இலையில் வைத்து பார்சல் செய்து கொடுக்க வேண்டும் என்பது போன்றவிழிப்புணர்வு ஏற்படுத்தி, நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்கும் முயற்சி துவங்கியுள்ளது. - மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள்.