புதிய வாக்காளர் சேர்க்கை பணிகள் மும்முரம்; நான்கு சிறப்பு முகாம் நடத்த திட்டம்
திருப்பூர்: தீவிர திருத்தம் முடிந்து வரைவு பட்டியல் வெளியான நிலையில், திருப்பூர் மாவட்டத்தின் எட்டு தொகுதிகளிலும், புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்த பணிகள் வேகமெடுத்துள்ளன. இதற்காக, நான்கு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில், கடந்த நவ. 4 ம் தேதி முதல் இம்மாதம் 14 ம் தேதி வரை, எஸ்.ஐ.ஆர். எனப்படும், சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, 19ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 பேர், வாக்காளராக இடம்பெற்றிருந்தனர். தீவிர திருத்தத்தில், 5.63 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. 9 லட்சத்து 83 ஆண்; 9 லட்சத்து 70 ஆயிரத்து 817 பெண்; 244 திருநங்கைகள் என, மொத்தம் 18 லட்சத்து 81 ஆயிரத்து 144 வாக்காளர்கள்வரைவு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தீவிர திருத்தப்பணி முடிந்ததால், ஜன. 1ம் தேதியை தகுதிநாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் சுருக்கமுறை திருத்தம் தற்போது நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு, புதிய வாக்காளர் சேர்க்கைக்கான படிவம் - 6, பெயர் நீக்கத்துக்கு படிவம் - 7, பெயர், முகவரி, மொபைல் போன் எண், புகைப்படம் உள்பட அனைத்துவகையான திருத்தத்துக்காக படிவம் - 8 வழங்கப்பட்டு, பூர்த்தி செய்து பெறப்பட்டு வருகிறது. நான்கு சிறப்பு முகாம் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், கல்லுாரி மாணவர்கள் வசதிக்காக, இம்மாதமும் அடுத்தமாதமும், எட்டு சட்டசபை தொகுதிகளிலுள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அவ்வகையில், வரும், 27, 28 தேதிகள், வரும் ஜனவரி மாதம், 3, 4 ம் தேதிகளில், சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. ஜனவரி 1ம் தேதியன்று, 18 வயது பூர்த்தியாகும் இளம்வாக்காளர்கள், தகுதியிருந்தும் வரைவு பட்டியலில் பெயர் இடம்பெறாதோர், முகாமில் படிவம் - 6 பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம். இறப்பு, இடம்பெயர்தல், இரட்டை பதிவு காரணமாக, பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோர் விவரங்களும், வாக்காளர் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. வாக்காளர்கள், சிறப்பு முகாமில் பங்கேற்று, பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தங்கள் இருப்பின், படிவங்களை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவேண்டும். ஆன்லைனும் உண்டு பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்த படிவங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் சுலபமான வசதியை தேர்தல் கமிஷன் செயப்படுத்தி வருகிறது. https://voters.eci.gov.in/ என்கிற தேர்தல் கமிஷனின் தளத்தில் சென்று, படிவம் 6, 7, 8 என தேவையான படிவத்தை தேர்வு செய்து, விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்; உரிய ஆவணங்களை இணைத்து சமர்ப்பித்தால் போதுமானது. அதேபோல், நேரடியாகவோ, ஆன்லைனில் அளிக்கும் படிவத்தின் நிலையையும், அதே தளத்தில், ஆன்லைனில் கண்டறியமுடியும்.